இந்திய-சீன தூதுக் குழுவில் தேனி பெண்!
தேனி: சீன- இந்திய இளையோர் தூதுக் குழுவில் தேனியைச் சேர்ந்த பெண் ஜோதி இடம் பிடித்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சீனா மற்றும் இந்திய இளையோர் கலாச்சார மற்றும் தோழமை உணர்வு பரிவர்த்தனை திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சீனாவிற்கு, இந்தியாவை சேர்ந்த 100 இளைஞர்களைக் கொண்ட தூதுக்குழு அனுப்பப்பட உள்ளது.
இந்த குழுவினர் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜுலை) 8-ந் தேதி வரையில் சீனாவில் சுற்றுப்பயணம் செய்து, இந்தியாவின் கலாச்சாரத்தைப் பற்றி பிரசாரம் மேற்கொள்வதுடன், சீனாவுடன் தோழமை உணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பிரசாரமும் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
இந்த குழுவுக்கு தமிழக அளவில் தேனி மாவட்டம் கம்பம் நகரை சேர்ந்த எஸ்.பி.ஜோதி என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக டெல்லி செல்லும் அவர் மத்திய அரசு அமைப்பான நேரு யுவகேந்திரா மூலம் வருகிற 29-ந் தேதி சீனத் தலைநகர் பெய்ஜிங் செல்கிறார்.
அவருடன் இந்தியா முழுவதிலுமிருந்து 100 இளையோர்கள் கொண்ட குழுவினரும் சீனாவுக்குச் செல்கிறார்கள். தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜோதி, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அங்கு அவர் மாவட்ட கலெக்டர் எஸ்.ஜே.சிருவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜோதி, தேனி மாவட்டத்தில் சுமார் 1,700 ஆண், பெண் சுய உதவிக் குழுக்கள் அமைத்து, அனைத்து குழுவும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை மேம்படுத்தும் அளவுக்கு நிர்வகித்துள்ளார். இவர் பாரத ஸ்டேட் வங்கி மூலம் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்துக்கு தொழில் வழி நடத்துனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனாதை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கருணையில்லம் நடத்தி வருகின்றார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக சுமார் 6 ஆயிரம் மரக் கன்றுகள் நட்டு, தொடர்ந்து பராமரித்து வருகின்றார். இலவச மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications