Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சர்ச்சை நாயகர்' சோம்நாத்!

Subscribe to Oneindia Tamil

Somnath Chatterjee
-அறிவழகன்

இந்திய அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது சோம்நாத் சாட்டர்ஜியின் அதிரடி நீக்கம். ஜோதிபாசுவின் சிஷ்யராக வலம் வந்து கொண்டிருந்த சோம்நாத்தின் இந்த வீழ்ச்சியால், அடுத்து அவரது அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற பெரும் கேள்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

1929ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூரில் பிறந்தவர் சோம்நாத். தந்தை நிர்மல் சந்திர சாட்டர்ஜி, அப்போதைய அகில பாரதீய இந்து மகா சேவா சங்கத்தில் தீவிர உறுப்பினராக இருந்தவர். இந்த அமைப்புதான் இன்றைய பாஜகவின் முன்னோடி அமைப்பு.

பின்னர் இந்து சேவா சங்கத்தின் கொள்கைகள், போக்கு பிடிக்காததால் அதிலிருந்து விலகி வெளியேறினார் நிர்மல் சந்திர சாட்டர்ஜி. பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.

சோம்நாத் சாட்டர்ஜி 1968ம் ஆண்டு தந்தையின் அடியொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 71ல் அவரது தந்தை திடீர் மரணமடையவே, அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

அதன் பின்னர் 9 முறை தொடர்ந்து எம்.பியாக இருந்துள்ளார். இடையில் 1984ம் ஆண்டு ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது மம்தா பானர்ஜியிடம் தோல்வியுற்றார்.

தற்போது போல்பூர் தொகுதியிலிருந்து 14வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோம்நாத் லோக்சபா சபாநாயகராக பதவி வகித்து வருகிறார்.

கொண்ட கொள்கையில் உறுதியானவர் என பாராட்டப்படும் சோம்நாத், முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் சிஷ்யர் ஆவார். ஜோதிபாசு முதல்வராக இருந்தபோது, மேற்கு வங்க மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்தார். அப்போது பல நாடுகளுக்குச் சென்று பல முதலீடுகளை மேற்கு வங்கத்திற்குக் கொண்டு வந்தார்.

செம்மயமான மேற்கு வங்கத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்க்கக் காரணமாக இருந்தவர் என்ற பெருமை சோம்நாத்துக்கு உண்டு.

ஆனால் புத்ததேவ் பட்டச்சார்யா முதல்வரான பின்னர் சோம்நாத்துக்கு கட்சி வட்டாரத்தில் செல்வாக்கு குறைந்தது. படிப்படியாக அவர் ஓரம் கட்டப்பட்டு வந்தார். சபாநாயகர் பொறுப்புடன் அவர் நின்று கொண்டார். கட்சியினருடன் அவருக்கு சுமூக உறவு இல்லாமலேயே இருந்து வந்தது. தற்போது கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு விட்டார்.

சிறந்த பேச்சாளரான சோம்நாத் சாட்டர்ஜி, நாடாளுமன்றத்தில் வாதிடுவதில் புகழ் பெற்றவர். புள்ளி விவரங்களை கூறி சிறப்பாக பேசுவார். இது அவருக்கு 1996ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற வாதி விருதினைப் பெற்றுத் தந்தது.

அடிப்படையில் வக்கீலான சோம்நாத், கட்சியில் இணைந்த பின்னர் சிபிஎம்மின் செய்தித் தொடர்பாளராக இருந்தார்.

இப்போது சர்ச்சை நாயகராக மாறியிருக்கும் சோம்நாத்துக்கு சர்ச்சைகள் புதிதல்ல. 92ம் ஆண்டிலேயே கட்சிக்குள் ஒரு பிரச்சினையில் சிக்கினார். அப்போது காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய உறவை வைத்திருந்தார் சோம்நாத். இது கட்சிக்குள் முனுமுனுப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸுடன் நெருக்கமாக இருப்பது ஏன் என்று கட்சியின் பொலிட்பீரோ சோம்நாத்திடம் விளக்கம் கேட்டது.

அவரை கட்சியை விட்டு நீக்கும் முடிவுக்கும் கூட கட்சி வந்தது. பின்னர் அந்த முடிவு மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் அவரது தோழரான எம்.பி.சைபுதின் செளத்ரி கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிக் குரல் எனகட்சியினரால் வர்ணிக்கப்பட்டார் சோம்நாத். கட்சியின் முடிவுகளை பகிரங்கமாக விமர்சித்து வந்ததால் இந்தப் பெயர் கிடைத்தது அவருக்கு.

சோம்நாத் நல்ல பேச்சாளராக இருந்தாலும் கூட அடிமட்ட அளவில் தொண்டர்களுடன் அவருக்கு எப்போதும் நல்லுறவு இருந்ததில்லை. காரணம், அவரது குருவான ஜோதிபாசு, சோம்நாத்தை நேரடியாக மேல் மட்ட அளவில் கொண்டு போய் வைத்து வளர்த்து விட்டதால். இதன் காரணமாக அடிமட்ட அளவில் சோம்நாத்துக்கு ஒருபோதும் ஆதரவு பெரியளவில் இருந்ததில்லை. கிட்டத்தட்ட ஒயிட் காலர் தலைவராகவே அவர் இருந்து வந்தார்.

2005ம் ஆண்டிலும் சோம்நாத் ஒரு சர்ச்சையில் சிக்கினார். ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு குறித்து அவர் விமர்சித்துப் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அதேபோல, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதன் ஸ்ரீநிகேதன் வளர்ச்சி ஆணைய தலைவர் பதவியை சோம்நாத் வகித்து வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இது லாபம் தரும் பதவியல்ல என்று கூறி ராஜினாமா செய்ய மறுத்து விட்டார் சோம்நாத். சில நாட்களுக்கு முன்புதான் இப்பதவியிலிருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையைக் கொண்டவரான சோம்நாத் சாட்டர்ஜி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

சோம்நாத்தின் அரசியல் வாழ்க்கை எந்த வேகத்தில் இருந்ததோ அதே வேகத்தில் தற்போது அவரது கட்சி வாழ்க்கைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+