ஸ்டாலின் வீசிய அந்த ஒரு வார்த்தை.. தவெக-வை எதிர்கொள்ள திமுக கையில் எடுத்துள்ள புதிய அஸ்திரம்
சென்னை: தவெக ஆட்சியில் ஏகப்பட்ட அரசியல் ட்விஸ்ட்கள் நடந்து, விவாதத்தையும் கிளப்பி வருகின்றன. குறிப்பாக, தவெக கூட்டணிக்குள் நிலவும் அமைச்சர் பதவி சலசலப்புகளுக்கு மத்தியில், விஜய் அரசை அசைக்க முடியாமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடங்கிக் கிடப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது... அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மேடைகளில் பேசும்போது "இந்த ஆட்சி நீடிக்காது" என்பதும் கவனம் பெற்று வருகிறது.. இதுகுறித்தெல்லாம் மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
பிரபல சேனல் ஒன்றில் பேசிய தராசு ஷ்யாம், "தேர்தல் வெற்றி, தோல்வி தொடர்பான வழக்குகள் பொதுவாகத் தேர்தல் முடிந்த பிறகுதான் போடப்படும். நடிகர் விஜய்யின் வேட்புமனுவில் சொத்து விவரங்களே முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகவும், குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதால் அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் வாக்காளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தவெக ஆட்சி நீடிக்குமா
தேர்தல் மனுவை தோற்றுப்போன வேட்பாளர்தான் போட முடியும் என்றாலும், வாக்காளர்கள் தங்களின் உரிமை அடிப்படையில் இத்தகைய வழக்குகளைத் தொடரலாம். விஜய் தரப்பில் இதற்கான திருத்தப்பட்ட வாக்குமூலம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வழக்குகளில் குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்காது.. தீர்ப்பு வருவதற்கு எப்படியும் குறைந்தபட்சம் 2 வருடங்கள் வரை ஆகலாம்.இடைத்தேர்தல் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாத சூழலில், தேசிய அரசியல் மாற்றங்களைக் கவனித்து அவசரப்பட வேண்டாம் என்றே அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் அடுத்தடுத்த முடிவுகளைத் தள்ளிப்போட்டு வருகின்றன.
திருமாவளவன், மாணிக்கம் தாகூர்
தவெகவும் திமுகவும் ஒரே அணியில் இருந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை வைப்பதும், அதற்கு வைகோவும், மாணிக்கம் தாகூரும் முரண்பாடான கருத்துக்களை சொல்வதும் கூட்டணிக்குள் குழப்பத்தையே காட்டுகிறது.
தேர்தல் முடிந்த பிறகு ஏற்படும் இத்தகைய முரண்பாடுகள் இந்திய அரசியலில் எப்போதுமே இருக்கக்கூடிய ஒன்றுதான். இந்த முரண்பாடுகளாலேயே தற்போதைய ஆட்சி கவிழ்ந்துவிடாது.. மறுபடியும் தேர்தல் வைத்தால் அதிக பெரும்பான்மையுடன் வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தால் யாரும் அப்படியொரு ரிஸ்க்கை எடுக்க மாட்டார்கள்.
ஸ்டாலின் - புதிய அஸ்திரம்
முதல்வர் ஸ்டாலின் இந்த ஆட்சி நீடிக்காது என்று பேசுவததெல்லாம், சொந்தக் கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், திமுக மற்றும் தவெக என்ற தேர்தல் களத்தை மறுபடியும் கட்டமைப்பதற்காகவும்தான்.. யதார்த்தமான விஷயம் என்று எதுவுமே இங்கில்லை.. இந்திய அரசியலில் டெல்லியை தாண்டி எதுவும் செய்ய முடியாது என்பதே எதார்த்தம்.
நடிகர் விஜய் ஆரம்பத்திலிருந்தே தனது கூட்டணியில் யார் வந்தாலும் அமைச்சர் பதவி தருவதாகக் கூறி கதவுகளைத் திறந்து வைத்திருந்தார். ஆனால் திமுக தரப்போ தங்களுக்கு அதுபோன்ற சிந்தனையே இல்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது. அப்படி மந்திரி பதவி வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் தாராளமாக விஜய் பக்கமே சென்றிருக்கலாம்.
இடைத்தேர்தலில் யார் வெற்றி
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், தாங்கள் தனித்து அல்லது வேறு அணியில் போயிருந்தால் 70 எம்.எல்.ஏக்கள் மற்றும் துணை முதலமைச்சர் பதவியைப் பெற்றிருப்போம் என்று இப்போது பேசுகிறார். கடந்த தேர்தலில் 28 இடங்களை வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தவர்கள், அன்று கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெற்றிருக்க வேண்டியதுதானே? அதற்கு அவர்களை யார் தடுத்தது?
கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சில அரசியல் முடிவுகள் தவறாக அமைந்திருக்கலாம்.. பிறகு யோசிக்கும்போது அது அரசியல் பிழைகளாக தெரியும். இத்தகைய அரசியல் போக்குகளுக்கு பிறகு மீண்டும் பிழைகளை திருத்த முயலும்போது, தவெகவும் திமுகவும் எப்படி ஒரே அணிக்குள் வர முடியும்? கட்சிகள் தவெக கூட்டணியில் இருக்க வேண்டும் அல்லது திமுக கூட்டணிக்கு வர வேண்டும், இல்லாவிட்டால் தனியாகத்தான் நிற்க வேண்டும்.
வைகோ - தவெகவுக்கான ஆதரவாளர்
வைகோ இப்போது முழுக்க முழுக்க தவெக ஆதரவாளராகவே மாறிவிட்டார். சந்திரமுகியாகவே மாறிவிட்டடார்.. தவெகவுக்கு கவசமாக இருப்பேன் என்று பேசுவதற்கு பின்னால், தனது மகனின் எதிர்கால அரசியல் அல்லது தனக்கு மீண்டும் கிடைக்கக்கூடிய ராஜ்யசபா உறுப்பினர் பதவி போன்ற சுயநலக் கணக்குகள் இருக்கலாம்.
மேலும், கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி ஒன்று வரவுள்ளதால், அதற்குள்ளேயே இப்போதிலிருந்தே போட்டி நிலவுகிறது. அரசியலில் அடிப்படை என்பதே வெற்றியும் சுயநலமும்தான். அதனடிப்படையில் எடுக்கப்படும் சில பிழையான முடிவுகள் பிறகு தோல்வியில் முடிவடையும்.
சுயநலத்திற்காக எடுக்கப்படும் சில அரசியல் முடிவுகள் தவறாகப் போய் தோல்வியில் முடிவடைந்த பிறகு, "அப்படிச் செய்திருக்கலாமோ, இப்படிச் செய்திருக்கலாமோ" என்று பின்னாளில் யோசிப்பதால் எந்தப் பயனும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications