கடத்தல் புகார்-கைத்தறி அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா நீக்கம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி - மலர்விழி தம்பதியினருக்குச் சொந்தமான சொத்துக்களைப் பறிக்கும் முயற்சியாக அவர்களையும், அவர்களது மகன் சிவபலானையும் அமைச்சர்ராஜாவின் ஆட்கள் கடத்தி வைத்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதில் பழனிச்சாமியும், மலர்விழியும் நேரில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். தங்களது மகன் சிவபாலன், இன்னும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்க அமைச்சர் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் தன் மீதான புகார்கள் பொய்யானவை, அரசியல் உள்நோக்கம் கொண்டவை என செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜா விளக்கியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று திடீரென கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிவபாலன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தான் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை, நண்பர்களுடன் பெருந்துறை, ஈரோடு, திருப்பூர், கோவை என சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததாக கூறினார். ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
அதேசமயம், நேற்று மாநில மனித உரிமை ஆணையத்தை அணுகிய பழனிச்சாமியும், மலர்விழியும் அமைச்சர் ராஜா மீது புகார் கொடுத்தனர்.
இந்தச் சூழ்நிலையில் இன்று அமைச்சர் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். முதல்வர் கருணாநிதி இதுதொடர்பாக ஆளுநருக்கு அளித்த பரிந்துரையை ஏற்ற ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, கைத்தறித்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து என்.கே.கே.பி. ராஜா நீக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் வழக்கில் மாட்டிய அமைச்சர் ராஜா அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2வது சர்ச்சை அமைச்சர் ராஜா:
கடந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் சர்ச்சையில் சிக்கி பதவி இழந்துள்ள 2வது அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், லஞ்ச வழக்கில் சிக்கிய தனது உறவினருக்கு சாதகமாக நடக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாவிடம் ரெக்கமன்டேஷன் செய்த விவகாரத்தில் சிக்கிய சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பதவியிலிருந்து விலகினார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில்தான் தற்போது ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் உள்ளிட்ட மிகப் பெரிய புகார்களுக்கு ஆளாகி பதவியை இழந்துள்ளார் ராஜா.
அத்தனைக்கும், பழனிச்சாமி - மலர்விழி தம்பதிக்கு சொந்தமான பூர்வீகமான 10 ஏக்கர் நிலம்தான் முக்கிய காரணம்.
இந்த நிலத்தை பறிக்கும் முகமாக பழனிச்சாமி தம்பதியையும், அவர்களது மகனையும் கடத்திச் சென்று சித்திரவதை செய்து, கொலை மிரட்டல்விடுத்தும், வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கியும் மிரட்டினார் ராஜா என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும்.
என்.கே.கே.பி. ராஜாவின் தந்தை என்.கே.கே. பெரியசாமி. இவர் முன்னாள் அமைச்சர் ஆவார். ராஜா, ஈரோடு மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கிறார். தற்போதைய அமைச்சரவையில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக இருந்து வந்தார்.
ராஜா வகித்து வந்த இத்துறைகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பான செய்திகள்:












Click it and Unblock the Notifications