எரிபொருள் சப்ளை: புஷ் கடிதத்தால் சிக்கலில் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

Bush
டெல்லி: எரிபொருள் விநியோக உத்தரவாதம் தொடர்பான உடன்பாடுகள், அமெரிக்காவை சட்டரீதியாக கட்டுப்படுத்தாது என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, புஷ்ஷை நம்பி மத்திய அரசு ஒட்டுமொத்தமாக மோசம் போயுள்ளதாக இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் என்.எஸ்.ஜி.க்குப் போனது முதல் அடுத்தடுத்து மத்திய அரசு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவிலிருந்து செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

முதலில் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு புஷ் நிர்வாகம் எழுதிய கடிதம் வெளியானது. இதற்கு இடதுசாரிகள், பாஜக ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்தன. மத்திய அரசை கடுமையாக சாடின.

இந்த சர்ச்சைக்கு ஒரு மாதிரியாக பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு. இந்த நிலையில் இன்னொரு 'குண்டை' எடுத்து புஷ் வீசியுள்ளார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக அதை நாடாளுமன்றத்தில் அதிபர் புஷ் தாக்கல் செய்துள்ளார். கூடவே அவர் அனுப்பியுள்ள கடிதம்தான் இப்போது இந்தியாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான 123 ஒப்பந்தத்தில், அணு எரிபொருள் வழங்குவது தொடர்பாக சில அரசியல் ரீதியிலான உத்தரவாதங்கள் தரப்பட்டுள்ளன. இருப்பினும் இவை சட்டரீதியில் அமெரிக்காவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று குறிப்பிட்டுள்ளார் புஷ்.

புஷ்ஷின் இந்தக் கடிதம் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஷ் கூறியுள்ளதன் சாராம்சம் என்னவென்றால், எரிபொருளை தொடர்ந்து வழங்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு இல்லை. அது நினைத்தால் எரிபொருள் சப்ளையை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ள முடியும். அதை இந்தியா ஏன் என்று கேட்க முடியாது. சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையிலும் இந்தியாவால் ஈடுபட முடியாது என்பதே.

காங்கிரஸ் விளக்கம்:

புஷ்ஷின் இந்த கடிதம் மத்திய அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசி தரப்பில் கூறுகையில், 123 ஒப்பந்தத்தில் தடையில்லாத எரிபொருள் விநியோகம் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. எந்தக் காரணத்திற்காகவும் எரிபொருள் சப்ளை பாதிக்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புஷ் கடிதம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், அரசின் உயர் தலைவரோ அல்லது அதிபரோ கொடுக்கும் வாக்குறுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதிபரின் வாக்குறுதிகள் கட்டுப்படுத்தக் கூடியவை என்று அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே புஷ்ஷின் கடிதம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றார்.

பாஜக - இடதுசாரிகள் கண்டனம்:

புஷ்ஷின் கடிதம் எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை சம்பாதித்துள்ளது. புஷ்ஷை நம்பி மத்திய அரசு மோசம் போய் விட்டது என்று சிபிஎம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீதாராம் எச்சூரி கூறுகையில், இன்னும் சில மாதங்களில் புஷ் ஓய்வு பெற்று விடுவார். பின்னர் ஹைட் சட்டம்தான் இந்த ஒப்பந்தத்ைத கட்டுப்படுத்தும். ஹைட் சட்டத்தில் தடங்கலற்ற எரிபொருள் சப்ளை தொடர்பாக எந்த உத்தரவாதமும் இல்லை.

ஆரம்பத்திலிருந்தே தவறான தகவல்களையே மத்திய அரசு தந்து வருகிறது. இப்போது புஷ்ஷை நம்பி மோசம் போயுள்ளது என்றார்.

என்.எஸ்.ஜியும் குண்டை போடுகிறது:

இதற்கிடையே, என்.எஸ்.ஜி. அமைப்பு தன் பங்குக்கு இன்னொரு குண்டைப் போட்டுள்ளது.

இந்தியாவின் அணு வர்த்தகத்திற்கு அனுமதி அளித்துள்ள என்.எஸ்.ஜி., இந்தியாவுக்கு நவீன அணு தொழில்நுட்பங்கள் எதையும் வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி யுரேனியம் செறிவூட்டுவது உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்று என்.எஸ்.ஜி தீர்மானித்துள்ளது. இந்தியாவுக்கு சலுகை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளிடம் இதைக் கூறித்தான், என்.எஸ்.ஜி. சமாளித்ததாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் புஷ் கடிதமும், என்.எஸ்.ஜியின் முடிவும் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

அமைச்சரவையில் விளக்கம்:

இந்த நிலையில், வியன்னாவில் நடந்த என்எஸ்ஜி கூட்டத்தில் அணு ஒப்பந்தம் தொடர்பாக நடந்த விவாதம் குறித்து அமைச்சரவையில் விளக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது, என்எஸ்ஜி நாடுகளுடன் 3 நாட்கள் நடந்த பேச்சு வார்த்தை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் சுருக்கமாக விளக்கினார்.

என்எஸ்ஜி நாடுகளுடனான பேச்சு வார்த்தை கடந்த 4ம் தேதி தொடங்கிய கூட்டம் சஸ்பென்ஸாக அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்தது. ஆஸ்திரியா, நியூஸிலாந்து, நார்வே, ஸ்விஸர்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து கடைசி நேரத்தில் ஒப்புதல் அளித்தன.

முதலில் நடுநிலை வகித்த சீனா, பிற்பாடு எதிர்ப்பு நாடுகளுடன் சேர்ந்து கொண்டு குட்டையை குழப்பியது. இதனால் இந்தியாவும் அமெரிக்காவும் டென்ஷனாயின. பின்னர் அமெரிக்கா கொடுத்த பிரஷரில் எதிரப்பு நாடுகள் பச்சைக் கொடி காட்டின. இதையடுத்து ஒப்பந்தம் ஒப்புதல் பெறப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+