பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் தராதீர்-அதிமுகவினருக்கு ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னைப் பற்றியும், கட்சியைப் பற்றியும், எனது அறிக்கைகளையும் சரியாக வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யும் பத்திரிக்கைகளுக்கு அதிமுகவினர் விளம்பரம் கொடுக்கக் கூடாது என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் அவர் பேசுகையில்,

சில பத்திரிகைகள் என்னைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் செய்திகளை சரியாக வெளியிடுவதில்லை. உண்மையாக நான் சொல்லும் கருத்துகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து, நமக்கு ஒரு 'நெகட்டீவ் இமேஜ்' ஏற்படுத்த இந்த பத்திரிகைகள் முயல்கின்றன.

தேனியில் நடந்த பொதுக்கூட்டத் தில் மாபெரும் கூட்டம் கூடியதைப் பற்றியும், ஒரு மணி நேரத்திற்கு மேல் பல முக்கியமான மக்கள் பிரச்னைகள் பற்றி பல கருத்துகளை எடுத்துச் சொன்னதையும், எந்த நாளிதழும் சரியாக வெளியிடவில்லை.

'தினமலர்' பத்திரிகையைப் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். தேனியில் மாபெரும் கூட்டம் கூடியதைப் பற்றியோ, ஒரு மணி நேரம் நான் ஆற்றிய உரையைப் பற்றியோ, 'தினமலர்' சென்னை பதிப்பில் ஒரு வார்த்தைக் கூட வெளிவரவில்லை.

நம்மைக் கேலி செய்வது போல், நான் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது போல் ஒரு புகைப்படத்தை மட்டும் வெளியிட்டனர். அவர்களுக்கு வேறு புகைப்படமே கிடைக்கவில்லையா? நம்மை சிறுமைப்படுத்துவதற்காகவே இப்படி செய்கின்றனர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

திமுக ஆட்சி வந்த பிறகு 'தினத்தந்தி' பத்திரிகையில் எனது அறிக்கைகளையோ, செய்திகளையோ, சரியாக வெளியிடுவதே இல்லை. மிகவும் கடுமையாக கருணாநிதியைச் சாடியோ, அரசைச் சாடியோ அறிக்கை வெளியிட்டால், அதை வெளியிடுவதில்லை.
அப்படியே வெளியிட்டாலும் என் அறிக்கை, உருக்குலையும் அளவுக்கு வெட்டி, உருத்தெரியாமல் மாற்றி, அதைப் படிக்கும் போது ஒன்றுமே புரியாத அளவுக்கு செய்து விடுகின்றனர்.

இந்தப் பத்திரிக்கை முதலாளிகள் எல்லாம் கருணாநிதியைக் கண்டு பயப்படுகின்றனர். தினந்தோறும் அவர்களோடு நேரடியாக தொலைபேசியில் பேசி, கருணாநிதியே மிரட்டுகிறார். உயிருக்குப் பயந்து, இந்தப் பத்திரிகைகள் நமது செய்திகளை சரியாக வெளியிடாமல் தடை செய்கின்றனர்.

'ஜெயா டிவி' மட்டும் இல்லை என்றால், எனது அறிக்கைகளோ, செய்திகளோ மக்களிடம் போய்ச் சேருவதற்கு வழியே இல்லை. நான் குறிப்பிட்ட இந்தப் பத்திரிகைகள், நான் குறிப்பிடாத இன்னும் சில பத்திரிகைகள், பேசவே தெரியாதவர்கள் பற்றிய செய்திகளையும், அவர்களது அர்த்தமற்ற பிதற்றல்களையும், அவர்களுக்கு கூடும் சுமாரான கூட்டத்தையும் பிரமாதமாக செய்திகளாக வெளியிடுகின்றன.

பத்திரிகைகள் நம்மைப் பற்றி எழுதினாலும், எழுதாவிட்டாலும் தேனியில் கூடிய கூட்டத்தை யாராலும் மறுக்க முடியாது. இந்தப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டாலும், வெளியிடாவிட்டாலும், நான் எங்கு சென்றாலும் இதுபோன்ற பெரும் கூட்டம் கூடத்தான் செய்யும்.

இந்தப் பத்திரிகைகளும், அரசியல் எதிரிகளும் அதைத் தடுக்க முடியாது. கருணாநிதி தலைகீழாக நின்றாலும், லட்சக்கணக்கான மக்கள் என் கூட்டத் திற்கு வருவதை தடுத்து நிறுத்த முடியாது.

இந்தப் பத்திரிகைகளுக்கு நீங்கள் விளம்பரம் கொடுக்கக் கூடாது. கடந்த 14, 15ம் தேதிகளில் நான் தேனிக்கும், ஆண்டிபட்டிக்கும் போயிருந்தபோது அங்கே, தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளின் உள்ளூர்ப் பதிப்புகளில் நூற்றுக்கணக்கான விளம்பரங்கள், கட்சியினரால் கொடுக்கப்பட்டிருந்தன.

நமது கட்சியினர், அவர்களுக்கு ஓடோடிச் சென்று விளம்பரம் கொடுப்பதால், அவர்களுக்கு காரியம் நடந்து விடுகிறது. நான் பார்த்து பாராட்ட வேண்டும் என்பதற்காகத் தானே நீங்கள் விளம்பரம் கொடுக்கிறீர்கள்!. என்னை மகிழ்விப்பது தான் உங்கள் நோக்கம் என்றால், இந்த பத்திரிகைளில் விளம்பரம் கொடுப்பதற்கு பதிலாக, துண்டு பிரசுரங்களை வெளியிடுங்கள்.
போஸ்டர்களை அச்சடித்து ஒட்டுங்கள், தட்டிகளை வையுங்கள். இவற்றை செய்தால் கூட நான் பார்ப்பேன், மகிழ்வேன், உங்களைப் போற்றுவேன்.நான் விளம்பரம் தர வேண்டாம் என்று சொன்ன, மாலை மலர், மாலை முரசு பத்திரிகைகளில் நேற்று மாலை கூட பல விளம்பரங்கள் வந்திருந்தன.

நம்மை உதாசீனப்படுத்தும் பத்திரிகைகளின் வருமானம் குறைந்தால் தான் வழிக்கு வருவர். அவர்கள் நம்மை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த பாடத்தை நீங்கள் தான் கற்றுத்தர வேண்டும்.

வேண்டாம் இஞ்சி இடுப்பழகி:

நான் பொதுக் குழுவிற்கு வரும் வழியில் கட்சியின் சார்பில் எனக்கு பல இடங்களில் வரவேற்பு கொடுத்தனர். அதில், ஓர் இடத்தில் மேடை போட்டு, "இஞ்சி இடுப்பழகி'' என்ற பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தனர்.

இது விரும்பத்தக்க ஒன்றல்ல. கட்சியின் கலாசாரத்தை மாற்றிவிடக் கூடாது. அது பண்பாடு குறைந்த செயலாகும். இனி, கட்சி சார்பில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் எம்ஜிஆர் பாடல்கள் மட்டும் தான் ஒலிக்க வேண்டும். இன்று பார்த்ததைப் போல் மீண்டும் இத்தகைய காட்சியை நான் எங்கும் பார்க்கக் கூடாது என்று கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+