நளினி விடுதலை: பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் பலியானார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மகளிர் சிறையில் நளினி சிறை வாசம் அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், தான் 16 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதால் தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார்.
கடுமையான குற்றங்கள் செய்து ஆயுள் தண்டனை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய இயலாது என்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். இரு தரப்பு விவாதங்களும் முடிந்ததால் வழக்கின் தீர்ப்பை கடந்த 19ம் தேதி நீதிபதி தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் தீர்ப்பினை அறிவித்தார் நீதிபதி நாகமுத்து.
நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பில், மனுதாரர்களின் விடுதலை கோரிக்கை குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு முறையாக அமைக்கப்படவில்லை. எனவே புதிதாக ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அங்கு மனுதாரர்கள் விரைவில் விடுதலை கோரும் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுக்களை ஆலோசனைக் குழு பரிசீலிக்க வேண்டும்.
கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு அரசுக்கோ அல்லது சிறை நிர்வாகத்திற்கோ உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசுதான் இதில் முடிவெடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் மனுக்களை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications