கர்நாடக சர்ச்சுகள் மீது தாக்குதல்: பஜ்ரங் தளம் காரணம் - உள்துறை
டெல்லி: கர்நாடகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பஜ்ரங் தளமே காரணம் என மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறையின், உள்நாட்டுப் பாதுகாப்பு சிறப்புச் செயலாளர் குமாவத் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில், அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. கிறிஸ்தவ சமுதாயத்தினர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மன வருத்தத்தில் உள்ளனர்.
சர்ச்சுகளையும், பிராத்தனைக் கூடங்களையும், பள்ளிகளையும் தாக்கி சேதப்படுத்தியது பஜ்ரங் தள தொண்டர்கள்தான்.
செப்டம்பர் 15ம் தேதியன்று மங்களூரில் சர்ச் மீது போலீஸாரே தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள்.
பஜ்ரங் தளத்தினர் நடத்திய கல்வீச்சைத் தொடர்ந்து இவர்கள் சர்ச்சுக்குள் நுழைந்து, பெண்கள், வயதானவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் தாக்கியுள்ளனர்.
காவல் துறையும், அரசும் பாரபட்சமாக நடந்து கொண்டதாக கிறிஸ்தவ சமுதாயத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக தென் கன்னட மாவட்ட எஸ்.பி. சதீஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மங்களூரில் நான்கு டி.எஸ்.பி. பணியிடங்கள் உள்ளன. இதில் 3 பதவிகள் காலியாகவே உள்ளன.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் பதட்டம் நிறைந்தவை. எனவே மிகவும் முதிர்ச்சியான, பொறுமையான அதிகாரிகளை அங்கு பாதுகாப்புக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பியிருக்க வேண்டும்.
எனது தலைமையிலான மத்திய குழு அங்கு நடத்திய விசாரணையின் அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றார் குமாவத்.
குமாவத் தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சக குழு சமீபத்தில் வன்முறை நடந்த பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தியது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications