தேமுதிக மாநாட்டை சீர்குலைக்க ஆளுங்கட்சி மிரட்டல்: விஜயகாந்த்
சென்னை: சென்னையில் வரும் 18ம் தேதி நடைபெறவிருக்கும் தேமுதிகவின் இளைஞர் அணி மாநாட்டுக்கு ஆளும்கட்சி சார்பில் இப்போதிலிருந்தே மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது. தடைகளை தாண்டி தொண்டர்கள் மாநாட்டுக்கு வந்து சேர்வார்கள். புதிய கட்சிகளை மிரட்டுவது நல்லதல்ல என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தேமுதிகவின் இளைஞர் அணி மாநாடு வரும் 18ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டுக்கு இப்போதிலிருந்தே ஆளும் கட்சியினர் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மாநாடு சம்பந்தப்பட்ட பேனர்களையும், கொடிகளையும் அகற்றும்படி சொல்கிறார்கள். சுவர் விளம்பரங்களை அழிக்க சொல்கிறார்கள்.
இப்போது அதற்கும் மேலாக வெளியூரிலிருந்து சென்னைக்கு வர பதிவு செய்திருந்த பஸ் நிறுவனங்களின் அதிபர்கள் ஆளும் கட்சி சார்பில் மிரட்டப்படுகிறார்கள். தேமுதிக மாநாட்டுக்கு பஸ் கொடுக்கக் கூடாது என்றும், மீறினால் பர்மிட் வழங்க மாட்டோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் பஸ் உரிமையாளர்கள் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விட்டனர். ஒரு கட்சி தேர்தலில் எப்படி ஜெயிக்க வேண்டும் என்று தான் நினைக்க வேண்டுமே தவிர, அராஜகத்தின் மூலம் மற்ற கட்சிகளை அழிக்க நினைக்கக் கூடாது.
அவர்கள் எந்த வகையில் தொண்டர்களை தடுக்க நினைத்தாலும் அதனை மீறி தொண்டர்கள் அதிகமாக மாநாட்டுக்கு வருவார்கள். அராஜகம் செய்வதற்காகத்தான் அண்மையில் சிறையில் இருந்த கைதிகளை விடுதலை செய்தார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
வளர்ந்த கட்சி புதிய கட்சியை மிரட்ட நினைத்தால் அது நல்லதல்ல. நீங்கள் எங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். புதிய கட்சிகள் வளர்வதற்கு அறிவுரை செய்ய வேண்டும். அது தான் நல்லது. போலீஸ் துறையும், போக்குவரத்துத் துறையும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
மாநாடு நடப்பதற்கு அரசு அனுமதி வழங்கி விட்டு இவ்வாறு தடைகளை ஏற்படுத்துவது, எங்கள் கட்சி வளர்ந்திருப்பதால் இவ்வாறு செய்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மாநாட்டின் போது கண்டிப்பாக அசம்பாவிதம் நடக்கும் என்று கருதுகிறேன். அதற்கு பாதுகாப்பு அளிப்பது போலீஸின் கடமையாகும். மாநாட்டுக்கு எந்த கட்சித் தலைவரையும் நான் அழைக்கவில்லை.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட அங்கு போர் நிறுத்தம் வேண்டும். தமிழர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். இந்த பிரச்சனையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறுகிறார். இப்போது அவர் அதிகாரத்தில் தானே இருக்கிறார்.
பிரதமரை அவர் நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்த வேண்டியது தானே. தந்தி அனுப்புங்கள் என்று கூறுவது ஒரு நாடகம். எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறுவதாக முதல்வர் கூறுகிறார். இவர் மற்ற கட்சிகளை குறை கூறித்தானே ஆட்சிக்கு வந்தார்.
ஈழப் பிரச்சனையில் 1956 முதல் குரல் கொடுப்பதாக கூறும் இவர், எந்த பிரச்சனையை இது வரை தீர்த்து வைத்திருக்கிறார், இதை தீர்க்க?
கீதாஜீவனுக்கு பதில்...
அமைச்சர் கீதா ஜீவன் தொகுதியான தூத்துக்குடியில் தினமும் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு உள்ளது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் சப்ளை வருகிறது.
தூத்துக்குடிக்கு அருகே உள்ள எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன் பட்டி ஆகிய ஊர்களில் 8 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதை அவர் கண்டு கொள்வதில்லை.
மேலும் எப்போதும்வென்றான் நீர்த்தேக்கம் பராமரிப்பின்றி தூர்ந்து போய் உள்ளது. இதையும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதை என் தொண்டர்களை வைத்து சரி செய்து கொள்வேன்.
குரங்கு-நெருப்பு-முதல்வர்
ஒரு குரங்கு எப்போதும் நேரடியாக நெருப்பை தொடாது. குட்டியை விட்டு தான் தொடச் செய்யும். அதே போல முதல்வர் நேரடியாக எனக்கு பதில் அளிக்காமல் அமைச்சர் மூலம் பதில் அளித்துள்ளார். முதலில் அந்த அமைச்சர் அவரது தொகுதியையும், மாவட்டத்தையும் சரி செய்யட்டும்.
தொலைத்தொடர்பு துறையில் அலைவரிசை தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடந்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 3ஜி என்று உருவாக்கி ஏகப்பட்ட ஊழல் இதில் நடந்துள்ளது.
இது எவ்வளவு ஊழல் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அமைச்சரை பதவி நீக்கம் செய்து விட்டு உச்சநீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தினால் தான் உண்மை நிலவரம் புரிய வரும் என்றார்.
நிருபர்களுடன் வாக்குவாதம்
பேட்டியின்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளால் விஜயகாந்த் கோபமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முன்பு மக்களுடன் மட்டும்தான் கூட்டணி என்றீர்கள், இப்போது உங்களது போக்கில் மாறுதல் தெரிகிறதே என்று சில நிருபர்கள் கேட்டதும், கோபத்துடன் நீங்கள் எந்தக் கட்சி என்று தெரியும், நீங்கள் எப்படி கேள்வி கேட்பீர்கள் என்றும் தெரியும், எனது வாயைப் பிடுங்காதீர்கள் என்றார்.
இதுபோன்ற கேள்விகளை யார் கேட்டாலும், இப்படித்தான் சமீப காலமாக பேசி வருகிறார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நிருபர்கள் யாருடன் கூட்டணி என்று கேட்டபோது, தேர்தல் வரும் தேதியை நீங்கள் சொல்லுங்கள், கூட்டணி யாருடன் என்பதை நான் சொல்கிறேன் என்றார். அதற்கு நிருபர்கள், தேர்தல் வரும்போது வரும் என்றனர். பதிலுக்கு விஜயகாந்த், அப்படியானால், அது வரும்போது நானும் சொல்கிறேன் என்றார்.
விஜயகாந்த்தின் பதிலால் நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை உணர்ந்த விஜயகாந்த், மக்களுடன்தான் எனது கூட்டணி. அதில் மாற்றம் இல்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார். அத்தோடு நிருபர்களும் விஜயகாந்த்தை விட்டு விட்டனர்.












Click it and Unblock the Notifications