இலங்கைப் பிரச்சினை தீரும் வரை கறுப்பு பேட்ஜ் அணியுங்கள்: விஜய்காந்த்
சென்னை: இலங்கை பிரச்சினையில் சுமுக தீர்வு வரும் வரை கறுப்பு பேட்ஜ் அணியுங்கள் என்று தே.மு.தி.க. இளைஞரணி மாநாட்டில் தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக 4-ம் ஆண்டு தொடக்க விழா, அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு இளைஞர் அணி எழுச்சி மாநாடு சென்னை தீவுத் திடலில் நேற்று நடந்தது.
மாநாட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
இளைஞர் அணி மாநாட்டுக்கு வாருங்கள் என்று சொன்னேன். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை பேனர் வைத்திருக்கிறீர்கள்.
கட்சியை ஆரம்பித்த போது விஜயகாந்த் கட்சி நூறு நாள் கூட ஓடாது என்றார்கள். 70 கட்சி இருக்கு, இது 71-வது கட்சி என்றனர். ஆனால் ஆரம்பித்த 3 வருடத்திலே 5 தேர்தலை சந்தித்தோம். 71- வது கட்சி என்பதில் 7- ஐ மக்கள் அழித்து விட்டனர். இது தான் முதல் கட்சி என்று சொல்ல வைத்தனர். அதற்கு காரணம் மக்கள்.
இப்போது மாநாட்டுக்கு வந்த 7 பேர் இறந்துள்ளனர். இறந்த தொண்டர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
இலங்கை பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி எம்.பி.க்கள் ராஜினாமா என்று அறிவித்துள்ளார்கள். இதெல்லாம் நாடகம். மின்வெட்டு, விலைவாசி உயர்வு இதையெல்லாம் மறைக்கத்தான் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை எடுத்துக் கொண்டு எம்.பி.க்கள் ராஜினாமா என்று சொல்லியிருக்கிறார்கள்.
உண்மையிலேயே ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் மேல்சபை எம்.பி.க்கள் துணை ஜனாதிபதிக்கும், எம்.பி.க்கள் பாராளுமன்ற சபாநாயகரிடமும் அல்லவா ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்க வேண்டும்.
கறுப்பு பேட்ஜ் அணியுங்கள்!
எனக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையே என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது. எவ்வளவு நிதி உதவி செய்திருக்கிறேன். சுனாமி வந்த போது கூட ரூ.6 லட்சம் கொடுத்துள்ளேன். இலங்கையில் ராணுவ தீர்வு அல்ல, அரசியல் தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கே இருப்பது போல சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை, ஒரு சுமுக தீர்வு ஏற்படும் வரை இன்று முதல் நமது தொண்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து நம்முடைய எதிர்ப்பை காட்ட வேண்டும். நான் சொல்லும் வரை கழற்றக் கூடாது.
மின்சார பிரச்சினையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அ.தி.மு.க. மீதும், அ.தி.மு.க. ஆற்காடு வீராசாமி மீதும் மாறி மாறி குற்றச்சாட்டு செய்து கொண்டிருக்கிறார்கள். தே.மு.தி.க.வை ஆட்சியில் அமர வைத்தால் 5 மாதங்களில் மின்சாரம் தருகிறேன். அதற்கான திட்டங்கள் இருக்கின்றன. மின் வெட்டால் நெசவாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இருட்டு லஞ்சம் வாங்குவதற்கு மட்டும்தான் உபயோகமாக இருக்கிறது.
இப்போது கவர்ச்சி திட்டங்கள் தான் போடுகிறார்கள். வளர்ச்சி திட்டங்கள் போடவில்லை. வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை கொடுப்பேன் என்றேன், இதன் மூலம் போலி கார்டுகள் ஒழியும், தவறுகள், முறைகேடுகள் ஒழியும். கல்யாண மண்டபம் இடிப்பு, கொலை முயற்சி வழக்கு, வருமான வரி சோதனை எல்லாம் நடத்தினார்கள். இதற்கெல்லாம் அடிபணிய மாட்டேன். அதற்காக ஆட்சிக்கு வந்தால் பழிதீர்க்க மாட்டேன். தனித்து போட்டியிடும் தைரியம் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு உண்டா? தே.மு.தி.க.வுக்கு மட்டுமே இந்த தைரியம் இருக்கிறது. இது என் தைரியம் அல்ல. அதற்கு காரணம் நீங்கள், மக்கள்தான். நம் கட்சி நிச்சயம் ஆட்சிக்கு வரும், என்றார் விஜய்காந்த்.
பண்ருட்டி ராமச்சந்திரன்
தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது: இந்த மாநாடு, தமிழக இளைஞர்களின் கோட்டை தே.மு.தி.க. தவிர வேறு கட்சியே இல்லை என்று நிரூபித்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோயை ஜெயலலிதா, கலைஞர் ஆகிய டாக்டர்களால் தீர்க்க முடியவில்லை. எனவே டாக்டரை மாற்றிப் பார்க்க வேண்டும் என்றார்.
மேடையில் பத்திரிகையாளர்கள்!
மாநாட்டு மேடையில், 500 பேர் உட்கார ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடநெருக்கடி காரணமாக பத்திரிகையாளர்களும் மேடையில் உட்கார வைக்கப்பட்டார்கள். கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் பிரமாண்ட திரையில் லேசர் மூலம் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
மாநாட்டு மலரை விஜயகாந்த் வெளியிட்டார். இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்துக்கு தங்க கிரீடத்தை பரிசாக வழங்கினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
*விலைவாசி உயர்வின் விளைவில் இருந்து மக்களைக் காப்பாற்ற தவறிய மாநில அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
*தமிழக மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பை தட்டிக் கழித்த மாநில அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
*இலங்கை பிரச்சினையில் மத்திய அரசை கண்டிக்கின்ற வகையில் உடனடியாக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும்.
*செஞ்சிலுவைச் சங்கம் மூலமாகவோ, ஐ.நா. சபை மூலமாகவோ இலங்கை தமிழர்களுக்கு தேவையான மருந்து, உணவு போன்றவற்றை உடனடியாக வழங்குவதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாநாட்டுக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், கு.நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் மத்திய சென்னை செந்தாமரைகண்ணன், தென்சென்னை வி.என்.ராஜன், வட சென்னை வி.யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.












Click it and Unblock the Notifications