அரசை கண்டித்து நவ. 6ல் சிபிஐ ஆர்ப்பாட்டம்
சென்னை: மின்சார உற்பத்திக்கான மாற்று வழியை முன் வைத்தும், தமிழக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட, மாநில அரசு முன் கூட்டியே சரிவர திட்டமிடாததே காரணம். 2006ல் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, வளர்ந்து வரும் தேவைகளை அறிந்து முன்கூட்டியே திட்டமிட்டு இருக்க வேண்டும்.
தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. அவற்றின் மொத்த உற்பத்தி திறன் 1000 மெகாவாட். இவற்றிக்கு நிலக்கரி கொடுத்தால் மின்சாரம் உற்பத்தியாகும். இது தொடர்பாக திட்டம் வரைந்து கொடுத்தும் தமிழக அரசு அதனை நிறைவேற்றவில்லை.
கல்பாக்கம் மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான கனநீரை உற்பத்தி செய்வது ஸ்பிக் தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையோ கடந்த 2 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. மத்திய, மாநில மற்றும் தனியார் முதலீடு கொண்ட கூட்டு ஸ்தாபனம் இது.
இந்த தொழிற்சாலைக்கு மத்திய அரசு ரூ.1500 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனாலும் அந்த தொழிற்சாலைத் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த பற்றாக்குறை மின் உற்பத்திக்கு தமிழக அரசின் தவறான கொள்கை தான் காரணம். மின்சார உற்பத்திக்கான மாற்று வழியை முன் வைத்தும், தமிழக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும்.
நவம்பர் 6ம் தேதி தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்கள், வட்டத் தலைநகரங்கள், நகராட்சிகள் ஆகிய 400 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications