இலங்கை விவகாரம்: கருணாநிதி பல்டி ஏன்?-ராமதாஸ்
சென்னை: அண்டை நாட்டு விவகாரத்தில் தலையிட்டு வங்கதேசத்தை இந்தியா உருவாக்கவில்லையா என்று கேட்ட முதல்வர் கருணாநிதி இரண்டே வாரத்தில் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையில் நம் நாடு ஓரளவுக்குத் தான் தலையிட முடியும் என்று பல்டி அடித்திருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதியும், சகவாழ்வும் திரும்புவதற்கேற்ற நடவடிக்கையை இந்திய அரசு உடனடியாக எடுத்து அதனை நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக்கியத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
அதனை, இரண்டு வாரகாலத்திற்குள்ளாக நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கெடு விதித்து அறிவித்தது. அந்த தீர்மானங்கள் உடனடியாக மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இடையில் எத்தனையோ நிகழ்வுகள், ஆனால் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. ஈழத்தில் அமைதியும், சகவாழ்வும் திரும்பவில்லை. சிங்களப் படையினரால் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறார்கள். அப்பாவித் தமிழர்கள் சாகடிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந் நிலையில் ஈழத் தமிழர்களின் துயரங்களைத் துடைப்பதற்காக நிதி திரட்டும் வேலையில் தமிழக அரசும், முதல்வரும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புவதும், அதற்காக நிதி திரட்டுவதும் அவசியம் தான். உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் இதற்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
அதே நேரத்தில் அது ஒன்றே நிரந்தர நிவாரணமாகிவிடாது. ஈழத் தமிழர்களுக்கு அமைதியும், சக வாழ்வும் நிரந்தரமாக அமைய வேண்டும். அதற்கு அங்கே சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும். ஆனால், நிதி திரட்டல் என்ற இப்போதைய நடவடிக்கை சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நமது முதன்மையான கோரிக்கையைப் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தேன்.
அதற்கு முதல்வர் கருணாநிதி நீண்ட விளக்கமளித்திருக்கிறார்.
போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கையை இந்திய அரசு உடனடியாக மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று அக்டோபர் 14ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அறைகூவல் விடுத்த முதல்வருக்கும்...,
மத்திய அரசின் நிலையையும், அதிகார எல்லையையும் நாம் உணர வேண்டாமா? இன்னொரு நாட்டுப் பிரச்சினையிலே பக்கத்து நாடு ஓரளவுக்குத்தானே, நேரடியாகத் தலையிட முடியும் என்று கேட்டு அடங்கிப் போக நினைக்கும் கருணாநிதிக்கும் இடையே எத்தனை இடைவெளி என்பதை தமிழர்கள் அனைவரும் நிச்சயம் எண்ணிப்பார்க்கத் தவற மாட்டார்கள்.
இடையில் அக்டோபர் மாதம் 17ம் தேதி சென்னையில் செய்தியாளர்களுடன் ஒரு நேர்காணல் நடந்துள்ளது. அப்போது இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையில் அண்டையிலே உள்ள நாடு குறுக்கீடு செய்ய முடியுமா? என்பது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி.
ஏன், பங்களாதேஷ் எப்படி வந்தது?. இது அந்த கேள்விக்கு அளிக்கப்பட்டிருக்கும் பதில். இப்படி பதிலளித்திருப்பவர் வேறு யாரும் அல்ல, முதல்வர் கருணாநிதிதான்.
ஆனால், 15 நாள் இடைவெளிக்கு பிறகு இன்னொரு நாட்டு பிரச்சினையிலே பக்கத்து நாடு ஓரளவுக்குத்தான் நேரடியாகத் தலையிட முடியும் என்றும், மத்திய அரசின் நிலையையும், அதிகார எல்லையையும் நாம் உணர வேண்டாமா? என்றும், மத்திய அரசு அதன் சக்திக்கேற்றவாறு உதவி வருகிறது என்றும் அதே கருணாநிதி தான் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்.
இலங்கையில் நடந்து கொண்டிருக்கிற போரை நிறுத்துவதற்காக ராணுவத்திற்கு ராணுவம் என்று தலையிடத் தேவையில்லை. அப்படி தலையிடுங்கள் என்று நாம் வற்புறுத்தவும் இல்லை.
ஆனால், பரம்பரை பரம்பரையாக மீன்பிடித்துக் கொண்டிருக்கும் கடலில், மீன்பிடிக்கச் செல்கிற நம்முடைய தமிழர்கள், இலங்கைக் கடற்படையினரால் அநியாயமாக சுட்டு வீழ்த்தப்படுகிறார்களே, அதைத் தடுக்கவாவது தலையிடக் கூடாதா?.
தமிழக மீனவர்களில் இனி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டால், இந்திய ராணுவம் சும்மா இருக்காது என்று எச்சரிக்கை செய்வதற்கு கூடவா இந்தியப் பேரரசுக்கு அதிகாரம் இல்லை?
அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. இலங்கை அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் பேசினார். வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்துப் பேசினார். சென்னையில் வரலாறு படைத்த மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தப்பட்டது. ராமேசுவரத்தில் திரைப்படக் கலைஞர்களின் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றன. சென்னையில் அனைத்து நடிகர்களும் ஒன்று திரண்டு உண்ணா நோன்பு இருந்தார்கள்.
இவையெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கான நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன என்பதற்கான சம்பவங்களா? இல்லவே இல்லை என்று முதல்வர் வாதிட்டிருக்கிறார்.
ஆனால், இவற்றால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? இலங்கையில் சண்டை ஓய்ந்திருக்கிறதா? ஈழத் தமிழர்கள் அமைதியாக வாழும் சூழல் உருவாகியிருக்கிறதா? இல்லவே இல்லை. மேலும் இத்தகைய நடவடிக்கைகளெல்லாம் இன்று மட்டுமா நடக்கின்றன.
30 ஆண்டு காலமாகத் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். இப்படி தீர்மானம் நிறைவேற்றுவதும், உண்ணா நோன்பு இருப்பதும், பேரணி நடத்துவதும் மட்டுமே இலங்கைத் தமிழர்களைக் காப்பதற்கான நடவடிக்கை என ஆறுதல் அடைந்து கொள்வோம் என்பது முதல்வரின் வாதமா?
இலங்கையில் நடைபெறுவது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி இலங்கை உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இங்குள்ள சிலரும் இந்த பொய் பிரசாரத்திற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் போர், சிறுபான்மையாக உள்ள தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்க முயலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் பிரதிநிதியாகத் திகழும் அரசை எதிர்த்து தமிழர்கள் நடத்துகின்ற உரிமைப் போர்.
அமைதி வழிமுறைகள் தோற்றுப் போய்விட்ட நிலையில், வேறு வழியின்றி எழுந்துள்ள தவிர்க்க முடியாத போராட்டம்.
இங்குள்ள தமிழர்களான மீனவர்களைக் காப்பதற்கே இந்தியா தலையிடலாம் என்பது ஒருபுறம் இருக்கையில், இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களை பூண்டோடு அழிக்கும் பெரும்பான்மையின மக்களின் செயலைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமையும், கடமையும் இந்தியாவுக்கு உண்டு.
அதற்கான அதிகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே வழங்கியிருக்கிறது. இந்தியாவும் ஏற்கனவே ராணுவத்தை அனுப்பி தலையிட்ட முன் உதாரணமும் இருக்கிறது.
எனவே, இலங்கைப் பிரச்சினையில் மட்டும் நேரடியாகத் தலையிட அதிகாரம் இல்லை என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
முதல்வர் இப்போது இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார் என்பது எனக்கு விளங்கவில்லை.
இதனை மத்திய அரசிடம் வலியுறுத்துங்கள் என்று சொன்னால், பாமகவை நோக்கி கையை நீட்டுகிறார் முதல்வர்.
மத்திய அரசில் எப்படி திமுகஓர் அங்கமோ அதைப்போலத்தான் பாமகவும் ஓர் அங்கம், மத்திய அரசை வலியுறுத்தும் பொறுப்பு என்னைப் போலவே அவருக்கும் உண்டு என்று முதல்வர் கூறியிருக்கிறார்.
பாமக மத்திய அரசில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சியாக இருக்கலாம். ஆனால், மாநிலத்தில் யாருடைய ஆட்சி நடக்கிறது?.
டெல்லியிலிருந்து வருகிற வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்றாலும் சரி, பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் என்றாலும் சரி, யாரைச் சந்தித்துவிட்டுப் போகிறார்கள்?.
தமிழகம் என்றால், தமிழக அரசு என்பது பொருள். அதன் அடிப்படையில் தான் முதல்வரை சந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். எனவேதான், தமிழகத்தின் சார்பில் நீங்கள் வலியுறுத்துங்கள் என்று சொல்கிறோம்.
தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது முதல், பல்வேறு அறிவிப்புகளுக்கெல்லாம் சொந்தம் கொண்டாடுகிற கருணாநிதி, இதில் மட்டும் பாமகவை நோக்கிக் கையை நீட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது?.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் முழுக்க முழுக்க எங்களுக்கு உடன்பாடு என்பதை பலமுறை தெரிவித்திருக்கிறேன். உறுப்பினர்களின் ராஜினாமா என்பது மக்களவைத் தலைவரிடமும், மாநிலங்களவைத் தலைவரிடமும் நேரடியாக வழங்கப்பட வேண்டியவை.
அதனால் தான், திமுக உறுப்பினர்கள் என்றைக்கு நேரடியாகத் தங்களது பதவி விலகல் கடிதங்களை அவைத் தலைவரிடம் வழங்குகிறார்களோ, அன்றைய தினத்தில் அடுத்த நிமிடமே பாமக உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை அவைத் தலைவரிடம் வழங்குவார்கள்.
இந்த விளக்கமெல்லாம் இங்கே நமக்குள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல; இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் நாம் எதிர்பார்த்திருந்த ஓரளவு ஒற்றுமை இப்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஒற்றுமையைக் கட்டிக்காப்போம் என்று முதல்வர் முன்மொழிந்துள்ளதை நான் வழி மொழிகிறேன்.
அதே நேரத்தில் இந்த ஒற்றுமையைப் பயன்படுத்தி மத்திய அரசை செயல்பட வைக்கும் கடமையிலிருந்து முதல்வர் தவறிவிடக் கூடாது என்பதை நினைவூட்டுவதற்காகத்தான் இத்தனை விளக்கங்களும்.
ஈழத் தமிழர்களைக் காக்க கடமை ஆற்ற முன்வாருங்கள். நிவாரணம் வழங்குவது மட்டுமே போதுமானது என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். இந்திய தமிழர்களான தமிழக மீனவர்களின் உயிரைக் காப்பதற்காவது இந்தியா தலையிட வேண்டும் என்று வற்புறுத்துங்கள். இந்த முயற்சியில் நாங்கள் துணை நிற்கிறோம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications