திருமா, மன்சூருக்கு காங். எம்எல்ஏக்கள் குறி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசும் திருமாவளவனையும் நடிகர் மன்சூர் அலிகானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டத்தை டெல்லி தலைமை தலையிட்டு ரத்து செய்விட்ட நிலையில் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூடிப் பேசினர்.

அதில், விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது மேலும் தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவை நெருக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 10ம் தேதி சட்டமன்றம் கூடுவதையொட்டி நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுப்பலாம் என்று தெரியவந்ததையடுத்து கூட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டது டெல்லி தலைமை.

இதையடுத்து கூட்டம் ரத்தானது. ஆனால், சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தினர். சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மொடக்குறிச்சி எம்எல்ஏ ஆர்.எம்.பழனிச்சாமி, சாத்தான்குளம் எம்எல்ஏ ராணி வெங்கடேசன், நாமக்கல் எம்எல்ஏ ஜெயக்குமார், சோளிங்கர் எம்எல்ஏ அருள் அன்பரசு, ராமநாதபுரம் எம்எல்ஏ அசன் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் இளங்கோவனின் ஆதரவாளர்களான வேலூர் எம்எல்ஏ ஞானசேகரன், செய்யாறு எம்எல்ஏ விஷ்ணு பிரசாத், போளூர் எம்எல்ஏ விஜயகுமார், ரிஷிவந்தியம் எம்எல்ஏ சிவராஜ் ஆகியோரும் போன் மூலம் ஆதரவு தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு கோருவது குறித்து குரல் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.

மேலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு சட்டமன்ற கூட்டத் தொடரில் பிரச்சனை எழுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பழனிச்சாமி, அருள் அன்பரசு, அசன் அலி ஆகியோர்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பலர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை அம்மா காங்கிரஸ் என்கிறார்கள். ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான விடுதலைப் புலிகளை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம்.

தொல்.திருமாவளவன், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் குரல் எழுப்புவோம்.

தமிழகத்தில் அமைதி நிலவ, உடனே தமிழக அரசு இதைச் செய்ய வேண்டும். விடுதலைப் புகளின் ஆதரவாளர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. டைரக்டர்கள் அமீர், சீமான் ஆகியோரின் கைது போல் அல்லாமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேஸ்வரத்தில் நடிகர்கள் பேரணி நடைபெற்றபோது, போலீசாரின் கவனம் முழுவதும் அங்குதான் இருந்தது. அந்த நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் மற்றும் மருந்து பொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

நடிகர்களின் பேரணியில் நடந்தது என்ன? என்பது குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்ப உள்ளோம். கவன ஈர்ப்புத் தீர்மானமும் கொண்டு வருவோம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+