ஐஎஸ்ஐ தலைவரை அனுப்பாதது ஏன்-பாக் மழுப்பல்
டெல்லி: ஐ.எஸ்.ஐ இயக்குநர் ஒருவரை அனுப்புவதாகத்தான் கூறினோமே தவிர ஐ.எஸ்.ஐயின் இயக்குநர் ஜெனரலை (தலைவர்) அனுப்புவதாக பாகிஸ்தான் ஒருபோதும் கூறவில்லை. நாங்கள் சொன்னதை இந்தியத் தரப்பு தவறாக புரிந்து கொண்டு விட்டது என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக முக்கிய தீவிரவாதிகள் குறித்த தகவலை அறிய ஐஎஸ்ஐ தலைவரை (இயக்குநர் ஜெனரல் பாஷா) அனுப்புமாறு பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா நெருக்குதல் தந்தது.
இதையடுத்து அனுப்புவதாக பாகிஸ்தானும் கூறியது. ஆனால் திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ தலைவர் வர மாட்டார். ஒரு பிரதிநிதான் வருவார் என கூறியது.
இதுகுறித்து அதிபர் சர்தாரி சிஎன்என் டிவிக்கு அளித்த பேட்டியில், நாங்கள் சொன்னதை அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். தவறான தகவலாக அது போய்ச் சேர்ந்துள்ளது.
ஐ.எஸ்.ஐயைச் சேர்ந்த ஒரு இயக்குநரை அனுப்புவதாகத்தான் சொன்னோமே தவிர இயக்குநர் ஜெனரலை அனுப்புவதாக பாகிஸ்தான் அரசு கூறவில்லை.
மேலும், பிரதமர் மன்மோகன் சிங் என்னுடன் பேசும்போது கூட ஐ.எஸ்.ஐயைச் சேர்ந்த இயக்குநர் ஒருவரை அனுப்புமாறுதான் கூறினார்.
ஆனால் நாங்கள் கூறிய தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் என்ன கேட்டாரோ அத்தான் நாங்கள் செய்வதாக கூறினோம்.
இயக்குநர் ஜெனரலை இப்போதே அனுப்ப வேண்டிய அவசியம் எழவில்லை.
முதலில் ஆதாரங்கள் கிடைக்கட்டும். விசாரணை நடக்கட்டும். அதன் பின்னர் தேவைப்பட்டால் இயக்குநர் ஜெனரல் இந்தியாவுக்கு செல்வார்.
ஐ.எஸ்.ஐ இயக்குநர் ஜெனரல் மிகவும் மூத்த அதிகாரி. அவர் நேரடி விசாரணையில் ஈடுபட மாட்டார். விசாரணைகளை மேற்பார்வையிடுவதுதான் அவரது பணி.
அதேசமயம், புலனாய்வுத்துறையின் விசாரணைகளில் பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைக்கும். மிகவும் மூத்த அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெறும் என உறுதியளிக்கிறேன்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் என்னை அதிர வைத்துள்ளது, காயப்படுத்தியுள்ளது. ஏராளமான உயிர்கள் பறிபோயிருப்பது வேதனையைத் தருகிறது.
இந்திய மக்களுக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் துணை நிற்கிறேன். அவர்களது வலி, இழப்பை நான் பரிபூரணமாக உணர்கிறேன். இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்கும்.
இது ஒரு உலகளாவிய சம்பவம். தற்போது நடைபெற்று வரும் தீவிரவாத செயல்கள் அனைத்துமே ஒரு நாடு அல்லது இரு நாடுகள் சம்பந்தப்பட்டவை அல்ல. உலகளாவிய நிகழ்வுகளாக மாறியுள்ளன. மும்பை சம்பவத்திலும் கூட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலியாகியுள்ளனர். உலக நாடுகள் பலவற்றின் புலனாய்வு அமைப்புகள் விசாரணையில் பங்கேற்றுள்ளன.
எனவே இதுதொடர்பான விசாரணையில் பாகிஸ்தானும் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்கும். பாகிஸ்தானைச் சேர்ந்த யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். இதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
மேலும், பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் ஏதேனும் செயல்படுவதாக தெரிந்தால் உடனடியாக அவற்றை மூட உத்தரவிடுவேன். முகாம்களை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
தாவூத் இப்ராகிம், ஹபீஸ் முகம்மது சயீத், முகம்மது அஜார் போன்றோரை இந்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க விரும்பினால், அதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர பூர்வாங்க நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அப்படி இருந்தால் தாராளமாக விசாரணைக்கு அனுமதிப்போம்.
இந்தியாவும், இந்திய மக்களும், பாகிஸ்தான் மக்களையும், பாகிஸ்தான் அரசையும் முழுமையாக நம்பலாம் என்றார் சர்தாரி.
பாக்.குக்கு காங். எச்சரிக்கை:
இந் நிலையில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று அவசரமாக கூட்டப்பட்டு மும்பை தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
3 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் பாதுகாப்பு கட்டமைப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதுபோன்ற தீவிரவாத செயல்கள் இனியும் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய தீர்மானம் குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறியதாவது:
மும்பை சம்பவத்தை அரசியலாக்க முயலும் தீய சக்திகளின் உள்நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை நம்பி ஏமாந்து விடக் கூடாது.
தீவிரவாதத்தை ஒடுக்கவும், நசுக்கவும், அரசு அனைத்து சக்திகளையும், அதிகாரத்தையும் பயன்படுத்தும். தீவிரவாதத்தை அரசியலாக்க முயலுவதை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும்.
இந்திய மக்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் ஒற்றுமையுடன் இருந்து, சவால்களை சமாளித்து, அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும்.
தீவிரவாதத்திற்கு எதிராக பொறுமை காக்க முடியாது. இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் யாரையும் காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளாது.
மும்பை சம்பவத்தில் ஏராளமான உயிர்கள் பறிபோயுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி ஆழ்ந்த வேதனையையும், சோகத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இது இந்தியாவின் அரசியல் கட்டமைப்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். இந்தியாவுக்கும், அதன் மக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகும்.
இது தேசிய சவால். இதை அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டாக சந்தித்து முறியடிக்க வேண்டும்.
இதுபோன்ற வன்முறைவாத, பிரிவினைவாத சக்திகளை முறியடிக்க தொடர்ந்து மக்களை ஒன்று திரட்டிப் போராட வேண்டும். அதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செய்யும்.
தீவிரவாதத்திற்கு மதம் இல்லை. அதை எந்த ரூபத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அனைவரும் இப்படிப்பட்ட பிரிவினைவாத சக்திகளை நிராகரிக்க வேண்டும்.
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமையைக் காத்துக் கொள்ளும் உறுதி நமது நாட்டிடமும், மக்களிடமும் உள்ளது.
இந்த பயங்கரவாத சம்பவத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கும், இன்னுயிரை ஈந்து மக்களைக் காத்த பாதுகாப்புப் படையினருக்கும் காங்கிரஸ் கட்சி தனது வணக்கத்தை செலுத்துகிறது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
வீர மரணம் அடைந்த பாதுகாப்புப் படையினர், காவல்துறையினரின் தியாகச் செயல்களை நாடு என்றென்றும் மறவாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications