சட்ட கல்லூரியில் ஜாதி அமைப்புகளுக்கு தடை உயர்நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டக் கல்லூரிக்குள் ஜாதி அமைப்புகளுக்கு இடம் தரக் கூடாது. மாணவர்கள், எந்த ஜாதி அமைப்பிலும் இடம் பெறக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி முதல் சென்னை சட்டக் கல்லூரியைத் திறக்கவும் அது உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 12ம் தேதி சென்னை சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் ஜாதி ரீதியாக மாணவர்களுக்குள் ஏற்பட்ட கடும் மோதல் பெரும் வன்முறையாக மாறி அனைவரையும் அதிர வைத்தது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்று சில இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்தது.

தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை சட்டக் கல்லூரியை 2009ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதியன்று திறக்க உரிய நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் எடுக்க வேண்டும்.

தற்போது செமஸ்டர் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் இவற்றை டிசம்பர் 10ம் தேதி முதல் நடத்த தேவையான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், சட்ட படிப்புக்கான இயக்குநர், தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் ஆகியோர் செய்ய வேண்டும்.

தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பு, பெற்றார், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அக்கூட்டத்தில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை அனைவரும் மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

கல்லூரிக்குள் இயல்பு நிலை திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தேர்வுகள் முறையாக நடக்கவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் வகுப்புகளுக்கு வர வேண்டும். இதை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

ஆசிரியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை அளிக்கலாம். மாறாக அவர்கள் ஆப்சென்ட் ஆவதைத் தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் முறையாக வகுப்புகளுக்குச் சென்று வகுப்புகள் எடுப்பதை கல்லூரி முதல்வர் கண்காணித்து வர வேண்டும். ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

அதேபோல மாணவர்களின் வருகைப் பதிவேடும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பீரியடிலும் மாணவர்களின் வருகை குறிக்கப்பட வேண்டும். இது அந்தந்த பாடங்களின் ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைத் தவிர வேறு யாரும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் குறிப்புகளை இடக் கூடாது. தற்போது உள்ள அலுவலக அட்டென்டர்கள் பதிவேட்டில் குறிப்புகளை இடும் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் புகைப்பட அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட வேண்டும். அதேபோல கல்லூரி ஊழியர்களுக்கும் அடையாள அட்டை தரப்பட வேண்டும். செமஸ்டர் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பு இவற்றை செய்ய வேண்டும்.

கல்லூரி நுழைவாயிலில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு 24 மணி நேர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

உயர்நீதிமன்ற காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள நுழைவாயிலை மட்டுமே போவதற்கும், வருவதற்கும் பயன்படுத்த வேண்டும். மற்ற நுழைவாயில்களை மூடி விட வேண்டும்.

கல்லூரி வளாகத்திற்குள் எந்தவிதமான தட்டி, போர்டு, போஸ்டர்கள் உள்ளிட்ட எதுவும் இடம் பெறக் கூடாது. அனைத்து அரசியல், ஜாதி ரீதியிலான பிரசாரமும் கல்லூரி வளாகத்திற்குள் தடை செய்யப்படுகிறது.

இந்த தடையை யாராவது மீறினால் அவர்கள் மீது பிரின்சிபல் கடும் நடவடிக்கை எடுக்கலாம். தேவைபப்ட்டால் மாணவர்களை சஸ்பெண்ட் செய்து ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கலாம். மேலும் தேவையான தண்டனையையும் வழங்கலாம்.

சட்டப் பல்கலைக்கழகத்துடன் கலந்து ஆலோசித்து சட்டக் கல்லூரி வளாகத்தைத் தவிர வேறு இடங்களிலும் தேர்வு மையங்களை அமைக்க கல்லூரி முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சட்டக் கல்லூரி மாணவர் விடுதி முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும். அங்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து தரப்பட வேண்டும். அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் சமூகத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதைச் செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.

தேவைப்பட்டால், மாற்று ஏற்பாடுகளையும் அரசு செய்யலாம். வேறு விடுதிகளில் மாணவர்களைத் தங்க வைத்து அங்கு தங்கியிருக்கும் காலம் வரை மாதம் ரூ. 1000 தொகையை மாணவர்களுக்கு அரசு வழங்கலாம்.

இதுபோன்ற மிகக் கொடூரமான தாக்குதல் சம்பவம் அனைத்து போலீஸாரின் கண்களுக்கு முன்பு நடந்துள்ளது மிகவும் வருத்தம் தருகிறது. எதிர்கால வக்கீல்களாக மாறவுள்ள மாணவர்கள் இப்படி மோதிக் கொண்டது வழக்கறிஞர் தொழில் மீதான மரியாதையைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம், சில மாணவர்கள் பிற மாணவர்களை அடக்கி ஆள முயற்சிப்பதே என்று தெரிய வருகிறது. ஜாதி மற்றும் சமூகம் சார்ந்த அரசியல் பிரிவுகளே இதற்குக் காரணம். அவற்றுக்கு மாணவர்கள் பலிகடாவாகி விட்டார்கள்.

எனவே அரசியல் தலைவர்கள், அமைப்புகள், கல்லூரிக்குள் தங்களது செயல்பாடுகளை கொண்டு வராமல் இருந்து, கல்லூரி முறையாக நடக்கவும், மாணவர்கள் முறையாக பாடம் கற்றுக் கொள்ளவும் ஒத்துழைக்க வேண்டும்.

மாணவர்களும், நமக்கு ஒரே ஒரு சமுதாயம் மட்டுமே இப்போது உள்ளது. அது மாணவர் சமுதாயம் என்பதை முதலில் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்குள் பிரிவினை, பேதங்கள் கூடாது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று தெரிவித்தனர்.

பின்னர் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+