திருமங்கலம் இடைத்தேர்தல்: அதிமுக போட்டி-வைகோ அறிவிப்பு

இந்தத் தொகுதிக்கு வரும் ஜனவரி 9ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் மதிமுக போட்டியிட்டது.
அதில் வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் சமீபத்தில் மரணமடைந்ததால் இடைத் தேர்தல் நடக்கிறது.
இதையடுத்து இந்தத் தொகுதியில் மதிமுகவே மீ்ண்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. வீர இளவரசனைப் போலவே ஜெயலலிதாவால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வைகோவுடன் சிறையில் இருந்த அழகுசுந்தரத்தை அங்கு நிறுத்த மதிமுக திட்டமிட்டிருந்தது.
ஆனால், அந்தத் தொகுதியில் அதிமுக போட்டியிட விரும்புவதாக வைகோவிடம் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று வைகோ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது அந்தத் தொகுதியை அதிமுகவுக்கு விட்டுத் தருவதாக வைகோ தெரிவி்த்தார்.
இது குறித்து இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2006ம் ஆண்டு நடை பெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டது. கழக வேட்பாளர் வீர. இளவரசன் வெற்றி பெற்றார்.
பெருந்துயரமாகத் திடீரென்று தாக்கிய இருதய நோயால் அவர் மறைந்து விட்டார். இன்னும் நான்கு மாதங்களுக்குள்ளாக நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுடன், திருமங்கலம் இடைத் தேர்தலும் நடைபெறும் என்று கருதியிருந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் திருமங்கலம் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 11ம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், அதிமுக போட்டியிடுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுவதாகவும், அப்படிப் போட்டியிடுவதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சம்மதத்தையும் ஆதரவையும் நல்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மறுமலர்ச்சி திமுக தலைமை நிர்வாகிகள், முன்னணியினரோடு கலந்து ஆலோசித்ததில், தற்போதைய சூழலில் நடைபெற இருக்கின்ற திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவளிப்பது என்றும், வெற்றிக்கு மிகுந்த முனைப்புடன் பணி ஆற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இது மதிமுகவுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications