போலியோ-6 குழந்தைகள் இறந்ததாக கூறுகிறார் ஜெ

போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு குழந்தை இறந்து போனதாக ஜெயா டிவி தவறான செய்தி பரப்பியதாக தமிழக அரசு நேற்று குற்றம் சாட்டியது.
இதே போல பெங்களூரில் போலியோ மருந்து குறித்து தவறான வதந்தி பரப்பியதாகக் கூறி ஒரு தனியார் தொலைக்காட்சி மீது கர்நாடக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந் நிலையில் 6 குழந்தைகள் இறந்துள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து தமிழக அரசின் சார்பாக அளிக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவர்.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து அளிப்பதற்கான முதல் முகாம் 21ம் தேதி அன்று நடைபெற்றது.
இந்த முகாமின்போது, 1. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொடிவேரிமேடு என்று இடத்தில் சங்கர் என்ற நான்கு மாதக் குழந்தையும், 2. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஏழுமான்திடல் என்ற இடத்தில் மோகன் என்பவரின் ஒன்பது நாள் பெண் குழந்தையும்,
3. பெரம்பலூர் மாவட்டம் எசனை என்ற இடத்தில் ஜோதி என்பவரின் ஐந்து மாத ஆண் குழந்தையும், 4. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டி பரிமளம் தம்பதியினரின் ஐந்து மாதக் குழந்தையும், 5. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சின்ன கவுண்டன்புதூர் என்ற இடத்தில் சுந்தரம்கலைமணி தம்பதியினரின் ஆறு மாதக் குழந்தையும்,
6. தருமபுரி மாவட்டம், கடகத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் ஐந்து நாள் குழந்தையும் இதுவரை இறந்துள்ளதாக தகல்கள் வந்துள்ளன.
மேற்படி குழந்தைகள் இறந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியவுடன், சொட்டு மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றபோது, சில மருத்துவமனைகளில் மருத்துவர்களே இல்லை என்றும், சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தும் சிகிச்சை அளிக்க தயக்கம் காட்டியதாகவும்,
சில பகுதிகளில் ஈவு, இரக்கம் இல்லாமல் காவல் துறையினர் பெற்றோர்களை விரட்டி அடித்ததாகவும் செய்திகள் வருகின்றன.
இது என்ன ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா?. ஹிட்லர், முசோலினி ஆட்சிக் காலங்களிலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் தான் இது போன்ற கொடுமைகள் நடைபெற்றதாக நாம் கேள்விபட்டிருக்கிறோம்.
தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னோக்கி அழைத்துச் சென்றது போதாது என்று, கொடுமைப்படுத்துவதிலும் கருணாநிதி தமிழகத்தை பின்னோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் மக்களிடையே பரவலாக உள்ளது.
இதுபோன்ற சம்பவம் நடப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கனவே இதே ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், பென்னாலூர் பேட்டை காலனியில் உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார மையங்களில் பணி புரியும் செவிலியர்கள் மூலம் தட்டம்மை ஊசி போடப்பட்டபோது மூன்று அப்பாவி பிஞ்சுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
பொதுவாக, இது போன்று சொட்டு மருந்து அளிக்கப்படும்போதோ, அல்லது தடுப்பூசி போடப்படும் போதோ சில நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது வழக்கம். உதாரணமாக, காய்ச்சல், சளி போன்றவை இருந்தால் சொட்டு மருந்து அளிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையாலும், கவனக் குறைவினாலும் தான் ஆறு பிஞ்சுக் குழந்தைகள் இறந்துள்ளன. இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications