திமுக-காங் 'உரசல்': கருணாநிதியுடன் மத்திய அமைச்சர் சந்திப்பு

இலங்கை பிரச்சனை, புலிகள் விவகாரத்தை வைத்து திமுக-காங்கிரஸ் இடையிலான உறவில் சிக்கல் நிலவி வருகிறது.
திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களுக்கும் காங்கிரசாருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து பெரியார் திகவினர் போராட்டம் நடத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவன் மீது தாக்குதல் நடத்தியதோடு, காங்கிரஸ் அலுவலக ஊழியர்களையும் தாக்கினர்.
இதையடுத்து விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து திமுக வெளிப்படையாக கருத்து ஏதும் தெரிவிக்காவிட்டாலும் இந்தக் கருத்து குறித்து காங்கிரஸ் தலைமையிடம் திமுக விளக்கம் கேட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து திமுகவுசுக்கு யாரும் எச்சரிக்கை விடவில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களான அபிஷேக் சிங்வி, டாம் வடக்கன் ஆகியோர் டெல்லியில் நிருபர்களை அழைத்து விளக்கமளித்தார்.
இந் நிலையில் தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயன்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட ஒருங்கிணைப்பாளரும், மத்திய அமைச்சருமான வயலார் ரவி இன்று திடீரென சென்னை வந்து முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தார்.
மொய்லியின் கருத்து குறித்தும், அதிமுக கூட்டணிக்கு தாங்கள் முயற்சிக்கவில்லை என்றும் கருணாநிதியிடம் வயலார் ரவி விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தூதராக அவர் வந்து இந்த சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
முன்னதாக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய வயலார் ரவியை வரவேற்க திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசாவும் வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் விமான நிலையம் வந்திருந்தனர். அவர்களுடன் விமான நிலையத்திலேயே வைத்து ஆலோசனை நடத்திய ரவி முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார்.
அவருடன் தங்கபாலு, சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் வந்திருந்தனர்.
இவர்களுடன் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, எம்பி கனிமொழி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்களும் வெளியேறிவிட கருணாநிதியும், வயலார் ரவியும் தனியே சந்தித்து சுமார் அரை மணி பேசினர். அப்போது கனிமொழி மட்டும் உடனிருந்தார்.
அப்போது அதிமுக கூட்டணி குறித்து காங்கிரஸ் சிந்திக்கவேயில்லை, புலிகள் விஷயத்தில் திமுகவை காங்கிரஸ் குறை கூறவில்லை என்று வயலார் ரவி விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய வயலார் ரவி,
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழர் சைமனை உடனடியாக மீட்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி கவலையுடனும், அக்கறையோடும் விசாரித்தார்.
மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை அவரிடம் விளக்கினேன். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துடனும் தொடர்ந்து பேசி வருகிறோம். சைமனை உயிருடன் மீட்க உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications