ஏப்.- மே மாதத்தில் பொதுத் தேர்தல் வரலாம்: கோபாலசாமி
டெல்லி: லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாத வாக்கில் பொதுத் தேர்தல் நடைபெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.
டெல்லியில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஏப்ரல், மே மாத வாக்கில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று கருதுகிறேன்.
மார்ச் மாதம் அனைத்து மாநிலங்களிலும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் காலமாகும். எனவே அதற்குப் பிறகுதான் தேர்தலை நடத்த முடியும். ஏப்ரல், மே மாதம்தான் தேர்தல் வரக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஜனவரி மாத மத்தியில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவுள்ளோம். அதன் பிறகு தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்துவோம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தலை 7 கட்டங்களாக, அமைதியான முறையில் நடத்தி முடித்திருப்பது திருப்தி அளிக்கிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு வாக்குப் பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் சமயத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிக அளவில் இல்லாததும் மகிழ்ச்சியைத் தருகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் அங்கு 43 சதவீத வாக்குகளே பதிவானது. ஆனால் இந்த முறை 61.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது மிகப் பெரிய விஷயமாகும்.
மக்களிடையே பய உணர்வு போய் விட்டது என்பதையே இது காட்டுகிறது. இது சந்தோஷமானது என்றார் கோபாலசாமி.


Click it and Unblock the Notifications
