ஜன. 30ல் அழகிரி பிறந்தநாள் - கொண்டாட தயாராகும் தொண்டர்கள்
மதுரை: திமுக தென் மண்டல அமைப்பு செயலாளரும், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரியின் 58- வது பிறந்த தின விழாவை மதுரையில் வருகிற 30ம் தேதி பிரமாண்டமாக கொண்டாட தொண்டர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மு.க. அழகிரியின் 58 -வது பிறந்த தினம் வரும் 30 -ம் தேதி தென் மாவட்டங்கள் முழுவதும் திமுக சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளையும், விழாவையும் நடத்த தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மதுரையின் எல்லா சாலைகளிலும், திரும்பிய திசையெங்கும் அஞ்சாநெஞ்சன் அழகிரி என்ற கட்அவுட்டுகள், டிஜிட்டல் பேனர்கள், ஆள் உயர போஸ்ட்டர்கள் பளிச்சிடுகின்றது.
அய்யர் பங்களா பகுதியில் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு விழா பந்தல் அமைக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
மு.க. அழகிரியின் 58 -வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக இந்த இடத்தில் 58 ஆயிரம் பேருக்கு பயன் தரும் நிகழ்ச்சியை விழா அமைப்பாளர்கள் நடத்த உள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஆனால், இலங்கையில் போர் உச்ச கட்டம் அடைந்து அங்கு தமிழர்கள் கொல்லப்பட்டு வருவதால் பிறந்த நாள் விழாவில் மு.க. அழகிரி கலந்து கொள்ள தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
செயலாளர்களுடன் அழகிரி ஆலோசனை
இந்த நிலையில் நேற்று திமுகவின் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் மதுரையில் ராஜா முத்தையா அரங்கில் நடைபெற்றது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications