போர் நிறுத்தம் இந்திய, இலங்கை அரசின் கூட்டு சதி; திருமாவளவன்
சென்னை: இலங்கை 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பது ஏமாற்று வேலை. இந்த சதிக்கு இந்திய அரசும் துணை போகிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
போர் நடக்கும் பகுதிகளில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவதற்காக 48 மணி நேர போர் நிறுத்தம் செய்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இது ஈழத்தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற மனிதநேய அக்கறையோடு அறிவிக்கப்பட்டுள்ளது என இலங்கை, இந்திய அரசுகள் கூட்டு சேர்ந்து நாடகம் நடத்துகின்றன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் முயற்சியால் இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஒட்டுமொத்த தமிழினத்தையும் இந்திய ஆட்சியாளர்கள் ஏமாற்ற பார்க்கின்றனர்.
ஐ.நா சபை உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கை-இந்திய படையினரின் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளை வெளிப்படையாக கண்டிக்க தொடங்கிய பிறகு, தற்போது இந்த நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.
48 மணி நேரம் கெடு விதித்த பின்னரும் தமிழர்கள் யாரும் வெளியேறவில்லை என்பதால் அவர்கள் பொதுமக்கள் அல்ல. அனைவருமே புலிகள் தான் என முத்திரை குத்தி பொதுமக்களை கொன்று குவிப்பதற்குரிய சாக்குப் போக்குகளை சொல்லவே இந்த இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
மேலும், கூடுதலான ஆயுதங்களையும் படையினரையும் ஒருசேர குவித்து கொடூரமான இடைவிடாத தாக்குதல்களை நடத்துவதற்காகவே இந்த இடைநிறுத்தத்தை இலங்கை- இந்திய அரசுகள் செய்துள்ளன. சர்வதேச சமூகம் இந்த கூட்டுச் சதியை உணர்ந்து ஒரு நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.
அண்மையில் பாதுகாப்பு வளையம் என இலங்கை படையினர் அறிவித்த பகுதிக்கு நகர்ந்து வந்த பொதுமக்கள் மீது ஈவிரக்கமின்றி நூற்றுக்கணக்கானவர்களை குண்டுவீசி படுகொலை செய்தனர்.
இலங்கை ராணுவத்தை நம்பி முல்லை தீவில் சிக்கியிருக்கும் தமிழர்கள் ராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. இளம் ஆண்களையும், பெண்களையும் வெள்ளை வேனில் கடத்தி சென்று கொடூரமான வதைகளை செய்து கொன்று புதைத்து வருகின்றனர்.
இது இலங்கை, இந்திய ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும் இடைக்கால போர்நிறுத்தத்தை அறிவித்திருப்பது தமிழினத்தையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுகின்ற நடவடிக்கை ஆகும்.
எனவே, நிரந்தர போர்நிறுத்தத்தை செய்து பேச்சுவார்த்தைக்குரிய ஏற்பாடுகளை செய்ய சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என்பதே தமிழ் சமூகத்தின் விருப்பமாகும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications