போலீஸார்-வக்கீல்களுக்கு அரசு பரிசு-சிகிச்சை!
சென்னை: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் வருகையின்போது பாதுகாப்புப் பணியில் சிறப்புடன் ஈடுபட்ட போலீஸாருக்கு தலா ரூ. 500 பரிசு மற்றும் உயர்நீதிமன்றக் கலவரத்தில் காயமடைந்த வக்கீல்களுக்கு இடைக்கால நிவாரணம், சிகிச்சைக்கான முழுச் செலவும் ஏற்பு ஆகிய பரிசுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சென்னை நந்தம்பாக்கத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய தொழில் அதிபர்களின் மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
போலீசாரின் பாதுகாப்பு பணியை பாராட்டி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
சென்னை புறநகர் போலீசாருக்கு இந்த ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு விட்டது. தற்போது இந்த பரிசு தொகை சென்னை நகர போலீசாருக்கு வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சென்னை நகர போலீசார் 10,341 பேர் பயனடைவார்கள். இதற்காக அரசு ரூ. 51.7 லட்சம் ஒதுக்கியுள்ளது.
சிகிச்சை செலவை அரசே ஏற்கும்:
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்த வக்கீல்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆண், பெண் போலீசார் 122 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் அவரவர் விருப்பம்போல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும், இதற்கான செலவு தொகையையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
வக்கீல்கள் விவகாரத்தில் போலீஸார் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில் அரசு இந்த குளிர்விக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications