போலீஸாரை போராட்டத்திற்கு தூண்டும் பிட் நோட்டீஸால் பரபரப்பு
சென்னை: வக்கீல்களை தற்கொலைப் படையாக மாறி கொல்வோம் என்றும் வக்கீல்களுக்கு எதிராக கடுமையான போராட்டத்திற்குத் தயாராவோம் என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ள பிட் நோட்டீஸ் சென்னை போலீஸாரிடையே விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவலர் ஆளினர்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருந்தது.
இந்த சங்கத்தின் சார்பில் சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தியதாகவும், அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது...
நியாயம் காக்கப்பட வேண்டும்...
- சட்டக்கல்லூரிக்குள் மோதல் நடந்தபோது ஏன் வேடிக்கை பார்த்தீர்கள்? ஏன் தடுக்கவில்லை? உங்களுக்கு மனிதாபிமானம் இல்லையா? என்று கேள்வி கேட்டார்கள். ஆனால், இப்போது போலீசார் ஐகோர்ட்டு வளாகத்திற்குள் எப்படி உள்ளே வரலாம் என்று கேள்வி கேட்கிறார்கள். போலீசார் தாக்கப்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. இதில் நியாயம் காக்கப்பட வேண்டும்.
- ஐகோர்ட்டு சம்பவத்தில் காயம் அடைந்த வக்கீல்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால், அந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஆண்-பெண் போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். இதில் ஓரவஞ்சனை காட்டப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு மட்டும் சங்கம் இருக்கும்போது, எங்களுக்கும் சங்கம் இருக்க கூடாதா?
- அரசியல் கட்சிகளும் ஐகோர்ட்டு சம்பவத்தில் நியாயமாக செயல்பட்டு போலீசாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
கண்டிக்காதது வேதனை தருகிறது...
- போலீஸ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசு ஊழியர் சங்கங்கள் எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. இது வேதனையாக உள்ளது.
- போலீஸ் மீது நடவடிக்கை எடுத்தால் நம்மில் ஒருவர் ஆயுதத்தை எடுத்து குறைந்தது 50 எதிரிகளையாவது வேட்டையாடி விட்டு நாமும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டும்.
- தற்கொலை படையாக மாறி 100 பேரை துவம்சம் செய்ய 2 பேர் சப்தம் எடுத்துள்ளனர். இவர்களின் உயிர்த் தியாகம் உலக போலீஸ் வரலாற்றில் இடம் பிடிக்கும். அவர்கள் குடும்பத்தை நம் குடும்பம் பார்த்துக் கொள்ளும்.
அந்நியன் பாணியில் தண்டனை...
- நமது எதிரிகளுக்கு விரைவில் அன்னியன் பாணியில் தண்டனை கொடுக்கப்படும். எத்தனை அடியாட்களை அழைத்து வந்தாலும் தண்டனை உறுதி.
- நமக்கு ஆதரவு தெரிவிக்காத அரசியல் கட்சிகளுக்கு வரும் பாராளு மன்றத் தேர்தலில் ஓட்டு போடக் கூடாது.
- நமது தபால் ஓட்டுக்களை பதிவு செய்யக் கூடாது. ஒரு லட்சம் போலீசார் மற்றும் குடும்பத்தினர் இதில் உறுதியாக இருக்க வேண்டும்.
- இன்று போலீஸ் நிலையம் எரிந்ததை எந்த சங்கமும் கண்டிக்கவில்லை. அவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.
விரைவில் சிறை நிரப்பும் போராட்டம்...
- விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் செய்ய போலீஸ் குடும்பத்தினர் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வக்கீல்களையும், உயர் போலீஸ் அதிகாரிகளையும் குறி வைத்து இந்த பிரசுரத்தில் வாசகங்கள் இடம் பெற்றிருப்பதால் பரபரப்பு நிலவுகிறது. யார் இதை விநியோகித்து வருவது என்பது தெரியவில்லை.
மேலும் 20 வக்கீல்கள் மீது வழக்கு
இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தின் நுழைவாயிலை உடைத்ததாக 20 வக்கீல்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வக்கீல்கள் உயர்நீதிமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கபப்ட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உயர்நீதிமன்றத்தின், ஆவின் நுழைவாயில் பகுதிக்கு வந்த சில வக்கீல்கள், அங்கு மூடப்பட்டிருந்த இரும்பு கேட்டை உடைத்து எறிந்தனர். பின்னர் உள்ளே புகுந்தனர்.
இதையடுத்து உயர்நீதிமன்றப் பதிவாளர் மாலா எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் 20 வக்கீல்கள் அத்துமீறி கேட்டை உடைத்து புகுந்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications