இலங்கைக்கு ஆயுதம்: 'பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார்'-மதிமுக
சென்னை: இலங்கை பிரச்சனை குறித்து வைகோ எழுதிய கடிதத்துக்கு பதில் அளித்த பிரதமர் அந் நாட்டுக்கு ஆயுதம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார் என்று சட்டசபையில் மதிமக உறுப்பினர் மு.கண்ணப்பன் குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்:
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி சாதனை படைத்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சர்களாக பணி புரிபவர்களும் காரணம்.
இலங்கை பிரச்சினையில் சில கட்சிகள் காங்கிரசை குறை கூறி வருகின்றன. இலங்கைக்கு மத்திய அரசு ஆயுதங்கள் கொடுத்ததாக தவறான தகவல்களை கூறுகிறார்கள். ஆயுதம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் ராஜா கேட்ட கேள்விக்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் பதில் சொல்லியிருக்கிறார்.
கண்ணப்பன் (மதிமுக): இலங்கை பிரச்சனை குறித்து வைகோ எழுதிய கடிதத்துக்கு பதில் அளித்த பிரதமர் ஆயுதம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): மத்திய அரசு இலங்கைக்கு ரேடார் கருவி கொடுத்துள்ளது.
பீட்டர் அல்போன்ஸ்: அதுபற்றி இந்த அவையில் பேசினால் அது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றதாக இருக்காது.
அமைச்சர் அன்பழகன்: சிங்கள அரசுக்கு சாதகமாக அந்த கருவி கொடுக்கப்படவில்லை.
பீட்டர் அல்போன்ஸ்: இலங்கையின் முனையில் வைக்கப்பட்டுள்ள அந்த கருவி இந்தியப் பகுதிகளை பார்க்கும் வகையில் இந்தியாவின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வைக்கப்படவில்லை. இலங்கை தமிழர்கள் மீது காங்கிரசும் அக்கறை கொண்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி வழங்கும்படி எங்கள் தலைவி சோனியா எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளும் போரை நிறுத்த வேண்டும். இலங்கை ராணுவமும் போரை நிறுத்த வேண்டும். இதை சொல்வதை விட்டுவிட்டு சிலர் இதை அரசியலாக்குகிறார்கள். சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் நடந்த மோதல் திட்டமிட்ட சதி என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து நீதிபதிகள் கூறியுள்ள தீர்ப்பில் சுப்பிரமணிய சாமி கோர்ட்டுக்கு வந்த போது சிலர் வேண்டுமென்றே பார்வையாளர் வரிசையில் இருந்த போலீசாரை தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இதில் இருந்தே போலீசார்- வக்கீல்கள் இடையே மோதலை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது.
அமைச்சர் அன்பழகன்: சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்வதற்காக நடத்தப்பட்ட சம்பவம் அது.
ஜி.கே.மணி (பாமக): யாரும் உத்தரவிடாமலேயே திடீரென்று ஆயிரக்கணக்கான போலீசார் கோர்ட்டுக்குள் புகுந்தது எப்படி?. இலங்கை பிரச்சினையில் வக்கீல்கள் தீவிரமாக தலையிடுவதால் அதைக் கட்டுப்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது.
பீட்டர் அல்போன்ஸ்: திடீரென்று ஆயிரம் போலீசார் வரவில்லை. ஏற்கனவே நீதிபதிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஐகோர்ட்டு வளாகத்தில் போலீசார் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.
வேல்முருகன் (பாமக): உத்தரவு இல்லாமல் போலீசார் கோர்ட்டுக்குள் புகுந்தது ஏன்?
பீட்டர் அல்போன்ஸ்: சென்னையில் பிரச்சனை நடந்த அதே நாளில் மதுரை, திருவாரூர், நாகர்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. எனவே வக்கீல்கள் என்ற போர்வையில் குழப்பத்தை ஏற்படுத்தி மீன் பிடிக்கும் குழப்பவாதிகள் என்பதுதான் உண்மை.
எனவே "தீக்கொளுத்தி'' கட்சிகளையும் அரசியல் ஆதாயத்துக்காக பிரிவினைவாதம் பேசும் கட்சிகளையும் தடை விதிக்க வேண்டும். வன்முறையை அரங்கேற்றி வாக்குகளை அள்ளி விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் நம்மை தவிர பதில் சொல்ல வேறு யாரும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications