அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...கண்ணப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் மரியாதை இல்லை என்று கூறிதானே தனி கட்சி துவக்கி பின்னர் திமுகவில் சேர்ந்தீர்கள், இப்போது மீண்டும் அதிமுகவில் இணைய முயல்கிறீர்களே என்று கேட்டதற்கு 'அரசியலில் இதெல்லாம் சகஜம்' என்று பதிலளித்தார் திமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் கண்ணப்பன்.

திமுக எம்எல்ஏ பதவியையும் (இளையாங்குடி தொகுதி) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த ராஜ கண்ணப்பன் நிருபர்களிடம் பேசுகையில்,

அதிமுகவிலிருந்து விலகிய பிறகு மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை துவக்கினேன். அதன் பிறகு திமுகவில் சேர்ந்தேன். கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 183 தொகுதிகளில் எங்களை சார்ந்த மக்களிடமிருந்து (கோனார்கள்) குறைந்தபட்சம் 40,000 முதல் 90,000 ஓட்டுகள் கிடைத்தன. ஆனால் எங்களுக்கு சரியான அங்கீகாரம் தரப்படவில்லை.

அங்கீகாரம் கிடைக்கவில்லை:

என்னை சார்ந்த மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் தேசம் கட்சியை திமுகவுடன் இணைத்து அக்கட்சியில் உறுப்பினர் ஆனேன். ஆனால் கடந்த சில மாதங்களாக திமுக தலைமையிடமோ, தலைவர்களிடமோ என்னை சேர்ந்த மக்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்படவில்லை.

இதனால் திமுகவை விட்டு வெளியேறும்படி மக்கள் தமிழ் தேசத்தினர் கோரிக்கை விடுத்தார்கள். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று ராஜினாமா செய்தேன்.

மக்கள் தமிழ் தேசம் கட்சியில் 6,000 நிர்வாகிகளும், 14.8 லட்சம் உறுப்பினர்களும் இருக்கின்றனர். அவர்களின் பொதுக்குழு கூட்டம் வருகிற 27ம் தேதி சென்னை எழும்பூரில் நடைபெறுகிறது. அடுத்தகட்ட அரசியல் முடிவு குறித்து அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

சட்டம்-ஒழுங்கு மோசம்:

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. அடிப்படையில் நானும் ஒரு வழக்கறிஞர் தான். உயர்நீதிமன்றத்தில் போலீசார் நடந்து கொண்ட முறை வரம்பு மீறிய செயலாகும். நீதித்துறை அரசியல் சாசன அமைப்பாகும். அதனை சீர்குலைக்கும் வகையில் காவல்துறை அத்துமீறி செயல்பட்டுள்ளது. இது அரசின் நிர்வாகத் திறமையின்மையை எடுத்துக் காட்டுகிறது.

ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருந்தால்தான் பொருளாதார ரீதியாக அம்மாநிலம் முன்னேற முடியும். ஆனால் தமிழகத்தில் அத்தகைய நிலைமை இல்லை.

இலங்கை பிரச்சனையில் இரட்டை வேடம்:

இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக அரசும், மத்திய அரசும் இரட்டை வேடம் போடுகின்றன.

தமிழர்களை பிளவுபடுத்தக் கூடாது என்று கருணாநிதி கூறுகிறார். ஆனால் இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்காக ஒரு இயக்கத்தை துவக்கினால் போட்டியாக இவர் ஒரு இயக்கத்தை ஏற்படுத்துகிறார். அவர்கள் மனித சங்கிலி நடத்தினால் இவரும் போட்டியாக மனித சங்கிலி நடத்துகிறார் என்றார்.

பதவி கிடைக்காததால் ராஜினாமாவா?:

பின்னர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்,

அமைச்சர் பதவி கொடுக்காததால்தான் நீங்கள் பதவியை ராஜினாமா செய்தீர்களா?.

தனிப்பட்ட முறையில் பதவி பெற வேண்டும் என்பதற்காக நான் ராஜினாமா செய்யவில்லை. என்னை சார்ந்த மக்களின் கோரிக்கை களையும், வேண்டுகோளையும் திமுக தலைமை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது.

எனவே அக்கட்சியில் தொடர வேண்டாம் என்று எனது ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதனால்தான் ராஜினாமா செய்தேன்.

அதிமுகவில் மரியாதை இருந்தது...:

கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் திமுக கடைநிலை ஊழியர்களுக்கும், தொண்டர்களுக்கும் உரிய மதிப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் அதிமுகவில் அந்த மரியாதை இருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து தொண்டர்கள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவிக்க முடியும். ஆனால் திமுகவில் அந்த நிலைமை இல்லை. மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்துக் கொள்கிறார்கள். அவர்கள் மீது புகார் கூறினால் கட்சித் தலைமை கண்டுகொள்வதில்லை என்றார்.

அதில் என்ன தப்பு?:

மீண்டும் நீங்கள் அதிமுகவில் இணையப் போவதாக கூறப்படுகிறதே?.

அதில் என்ன தவறு உள்ளது அதிமுக எனது தாய் கழகம். சாதாரண தொண்டனாக இருந்த என்னை அமைச்சராக்கியது அதிமுகதான். எந்த முடிவாக இருந்தாலும் 27ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...:

அதிமுகவில் மரியாதை இல்லை என்று கூறிதானே தனி கட்சி துவக்கி பின்னர் திமுகவில் சேர்ந்தீர்கள்?

அரசியலில் இதெல்லாம் சகஜம். பாஜகவுடன் திமுக முன் கூட்டு வைத்தது. பின்னர் காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட்டது. அரசியலில் அவ்வப்போது எடுக்கப்படும் நிலைப்பாடுகள் இவை.

இலங்கை தமிழர் பிரச்சனையில் உங்கள் நிலை என்ன?

இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல்ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். அதே நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தர முடியாது.

அமைச்சர் பெரியகருப்பனுடன் உங்களுக்கு மோதல் ஏற்பட்டதால் திமுகவிலிருந்து நீங்கள் ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வந்ததே?

பெரிய கருப்பன் அமைச்சரான பிறகுதான் அவரை தெரியும். அவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சியில் இருந்தவரை நான் கட்டுப்பாட்டோடு செயல்பட்டேன்.

நீங்கள் தேமுதிகவில் சேரப் போவதாக செய்திகள் வந்தனவே?

அப்படியெல்லாம் இல்லை. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி என்னுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது. ஆனால், என்னைப் பொறுத்த வரை அதிமுகவுக்குத்தான் முன்னுரிமை என்றார்.

இளையாங்குடியில் இடைத் தேர்தல் எப்போது?:

கண்ணப்பன் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இளையான்குடி சட்டமன்றத் தொகுதிக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே இடைத் தேர்தல் நடக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+