பார்வையற்ற மாணவி மர்ம சாவு-விசாரணை
திருச்சி: திருச்சியில் உள்ள அரசு பார்வையற்றோர் மேல் நிலைப் பள்ளியில் படித்து வந்த மலர் என்ற 16 வயது பத்தாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தரணிபாடியை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயியான இவரது மகள் மலர். 16 வயதான மலர், திருச்சி புத்தூரில் உள்ள அரசு பார்வையற்றோர் மேல் நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த பள்ளி விடுதியில் மொத்தம் 126 மாணவிகள் தங்கி உள்ளனர். தலைமை ஆசிரியராக கோபாலும், வார்டனாக ராஜலட்சுமியும் உள்ளனர். 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பணியில் உள்ளனர்.
நாளை மறுநாள் பிளஸ்-2 தேர்வும், அதை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி தேர்வும் தொடங்கவுள்ளதால், மாணவிகள் தீவிரமாக படித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலையில் மலருடன் தங்கியிருந்த மற்ற மாணவிகள் மலரை எழுப்பினார்கள் ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை அசைவற்று கிடந்தார். இந்த தகவல் வார்டன் ராஜலெட்சுமிக்கு தெரிவிக்கபட்டது. அவர் வந்து பார்த்தபோது மலர் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் படுக்கையில் கிடந்தார்.
உடனே மலரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மலர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சவுண்டய்யாவுக்கு தகவல் போனது. அவர் மாவட்ட மறுவாழ்வு நல அலுவலர் சியாமளாவிடம் இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
மேலும் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வார்டன் ராஜலெட்சுமியிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.
மாணவி மலருக்கு கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு இருந்து வந்தது. இதனால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று சிகிச்சை அளித்து உள்ளனர்.
மேலும் அவர் ரத்தம் குறைவாலும் பலவீனமாக இருந்து உள்ளார். இதனால் மலர் ரத்தம் கக்கி மரணமடைந்து இருக்கலாம் என்று வார்டன் தெரிவித்து உள்ளார். ஆனாலும் பிரேத பரிசோதனை முடிவில் தான் மாணவி சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications