பெங்களூரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிரமாண்ட பேரணி
பெங்களூர்: ஈழத் தமிழர்கள் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் இலங்கை தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம் மற்றும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை ராணுவம் விடுதலை புலிகளுக்கு எதிராக போர் என்ற பெயரால் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருவதை கண்டித்து, இந்தப் பேரணி நடந்தது.
பெங்களூர் டவுன்ஹாலில் துவங்கிய பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரளாக கலந்து கொண்டனர். மதியம் 2 மணிக்கு பேரணி தொடங்கியது.
இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணிக்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராசன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிட கழக செயலாளர் பழனி, கர்நாடக தமிழ் மக்கள் இயக்க நிர்வாகி மாரி, தமிழ் பிரமுகர்கள் பழனிகாந்த், செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிரபாகரன் பேனர்...
திறந்தவெளி லாரியில் இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் உள்பட தமிழ் பிரமுகர்கள் சென்றனர். அதைத்தொடர்ந்து சாரை சாரையாக பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் கையில் தமிழ் இனப்படுகொலையை கண்டிக்கும் வகையில் எழுதப்பட்ட பேனர்களை வைத்து இருந்தனர்.
இலங்கையில் கொல்லப்படும் அப்பாவி குழந்தைகளின் படங்களையும் பிடித்தப்படி சென்றனர். பிரபாகரன் படத்தை கையில் ஏந்தியப்படி வந்தனர்.
பேரணியில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களும் கலந்து கொண்டு கோஷம் எழுப்பியபடி சென்றார்கள். பேரணிக்கு கோலார், சிமோகா உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தமிழர்கள் கலந்து கொண்டனர்.
அல்சூர் கேட் போலீஸ் நிலையம் அருகே பேரணி வந்தபோது பெருந்திரளான கூட்டத்தால் பேரணி ஸ்தம்பித்தது. அப்போது பயங்கர நெரிசல் ஏற்பட்டது. போலீசாருக்கும், பேரணி சென்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
ஈழ ரத்தம் எங்கள் ரத்தம்:
கொல்லாதே கொல்லாதே தமிழர்களை கொல்லாதே. இந்திய அரசே, இந்திய அரசே சிங்கள ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்காதே. வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ் ஈழம் வெல்லட்டும். மோதாதே மோதாதே தமிழனிடம் மோதாதே. ஈழ ரத்தம் எங்கள் ரத்தம். புலிகள் மீதான தடையை நீக்கு, இந்திய அரசே இந்திய அரசே போரை நிறுத்த நடவடிக்கை எடு. ராஜபக்சே தீவிரவாதி என பேரணியில் சென்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பேரணியின் முடிவில் பன்னப்பா பூங்காவில் பொதுக்கூட்டம் நடந்தது. கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பாக பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் நலனுக்காக ஏற்கனவே திரட்டப்பட்ட ரூ.1 லட்சம் நிதியை சிவாஜிலிங்கத்திடம் வழங்கினர்.
நிதியை பெற்றுக்கொண்ட சிவாஜிலிங்கம் நன்றி தெரிவித்து கொண்டார். அந்த நிதியை ஈழத்தமிழர் பேரவை அமைப்புக்கு வழங்குவதாக தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகள் ராசனிடம் நிதி அளித்தனர். அந்த நிதியை அவர் பெற்று சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைத்தார்.
கர்நாடக கவர்னரிடம் மனு:
இதற்கிடையே ராசன் தலைமையில் தமிழ் பிரமுகர்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று மனு கொடுத்தனர். இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
பேரணியையொட்டி பாதுகாப்புக்கா ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மத்திய மண்டல துணை கமிஷனர் ரமேஷ் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டார். பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
மண்டியிடமாட்டோம்...:
பொதுக் கூட்டத்தில் பேசிய இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் கூறுகையில்,
இலங்கையில் ராணுவ தாக்குதலால் தமிழ் ஈழம் பற்றி எரிகிறது. இப்போது உங்கள் மத்தியில் பேசி கொண்டிருக்கும் நேரத்திலும் இலங்கை ராணுவம் தமிழ் மக்கள் மீது குண்டு வீசிக் கொண்டிருக்கும். இதில் ஒரு நாளைக்கு 100 அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.
அங்கு தமிழ் இனத்தை அழிக்கும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்களும் போரை நிறுத்த வலியுறுத்தி பேரணியும், மனித சங்கிலி ஊர்வலமும் நடத்தி வருகின்றனர்.
ராஜபக்சே ராணுவம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. விடுதலை புலிகள் அங்கு விடுதலை போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயுதத்தை போட்டுவிட்டு பேச்சுவார்த்தை நடத்தலாம் என சொல்கிறார்கள். நாங்கள் ஆயுதத்தை போட்டுவிட்டு உங்களிடம் மண்டியிட மாட்டோம்.
தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கொடுத்தால் மட்டுமே விடுதலை புலிகள் பேச்சுவார்த்தை நடத்த வருவார்கள். இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ராணுவ உதவி செய்து வருகின்றன. இவை அனைத்தையும் எதிர்த்து தான் புலிகள் போராடி வருகின்றனர்.
ஈழதமிழ் மக்களுக்கு ஒரே தலைவர் பிரபாகரன் தான். இலங்கை நாடாளுமன்றத்தில் 22 எம்.பிக்கள் உள்ளனர். ஒவ்வொருமுறை நாடாளுமன்றம் கூடும்போதும் ராஜபக்சே போரில் இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை எப்போதும் ஆயிரத்துக்கு குறைவாக தான் சொல்வார். விடுதலை புலிகள் குறைவாக தான் இருக்கிறார்கள் அவர்கள் அழித்துவிடலாம் என்பார்.
அங்கீகரிக்க வேண்டும்...:
ஜனவரி 31ல் லண்டனில் பேரணி நடந்தது. கனடாவில் மைனஸ் 45 டிகிரி குளிரில் பனிகட்டியாக கொட்டும் நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் தமிழர்கள் திரண்டு வருகின்றனர். நான் உங்கள் மத்தியில் பேசி கொண்டிருக்கும் நேரத்திலும் மும்பையில் மனித சங்கிலி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. சரித்திரம் திரும்புகிறது. தமிழர்கள் மீது என்ன தான் அடக்குமுறை கையாண்டாலும் நிச்சயமாக ஈழத்தமிழர்களுக்கு விடிவு காலம் கிடைக்கும்.
இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம். இந்தியா எங்களுக்கு உதவவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும். ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் வைகோ போன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார் சிவாஜிலிங்கம்.
கே.பி.அக்ரஹாரத்தில் உண்ணாவிரதம்:
இதற்கிடையே பெங்களூர் கே.பி.அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் முன்பு ஈழத் தமிழர்கள் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதம் நடந்தது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கன்னடம் மற்றும் தமிழ் மொழி வேறுபாடு இல்லாமல் அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications