சரத்துடன் கூட்டணி-3 தொகுதிகளில் மனித நேய கட்சி போட்டி

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மனித நேயக் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அதிமுக அணியில் இடம் பெற முயற்சிகள் நடந்தன. இருப்பினும் அதுவும் சரிவரவில்லை.
இதையடுத்து நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது மனித நேய மக்கள் கட்சி.
இந்த உடன்பாட்டின்படி மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனித நேயக் கட்சி போட்டியிடுகிறது.
மாயவரத்தில் ஜவாஹிருல்லாஹ்..
மயிலாடுதுறையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் போட்டியிடுகிறார்.
மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி போட்டியிடுகிறார்.
ராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சரத்-கிருஷ்ணசாமிக்கு மட்டும் ஆதரவு:
இந்த 3 தொகுதிகள் தவிர மற்ற இடங்களில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் ஆகியவை போட்டியிடும் இடங்களில் அவற்றுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளி்க்கும்.
இன்று மாலை சென்னை தாம்பரத்தில் இக்கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது வேட்பாளர்களை முறைப்படி அறிவிக்கவுள்ளனர்.
ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகத்திற்கு மட்டும் ஆதரவு தர மனித நேயக் கட்சி முடிவு செய்துள்ளது.
தேர்தலி்ல் போட்டியிடுவதையடுத்து ஹைதர் அலி தனது வக்பு வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதி்முகவிற்கு இந்திய தேசிய லீக் 'குட்பை'!:
தங்களுக்கு அதிமுக கூட்டணியில் ஒரு இடம் கூட தரப்படாததால் அதிமுகவை தோற்கடிப்பதே எங்களது இலக்கு என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாமூதீன் கூறியுள்ளார்.
நீண்ட காலமாக அந்தக் கூட்டணியில் உள்ளது இந்தக் கட்சி. இவர்களுக்கு ஒரு இடமாவது தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தக் கட்சியை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டார் ஜெயலலிதா.
இந் நிலையில் நாகையில் நிருபர்களிடம் பேசிய இக் கட்சியின் பொதுச் செயலாளர் நிஜாமூதீன்,
அதிமுக கூட்டணியில் இஸ்லாமிய இயக்கத்திற்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை. மேலும், அவர்கள் கட்சியில் உள்ள சிறுபான்மையினர்களுக்கு கூட அவர் வாய்ப்பு வழங்கவில்லை.
மக்களவை தேர்தலில் எங்களது நிலைப்பாடு குறித்து சென்னையில் ஏப்ரல் 10ம் தேதி முடிவு செய்யப்படும். அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை தோற்கடிப்பதே எங்களது இலக்கு என்றார்.












Click it and Unblock the Notifications