For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்குகளைப் பெற நாடகமாடுகிறார் கருணாநிதி - ஏமாற வேண்டாம்: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha at Sankaran Kovil
தூத்துக்குடி: இலங்கையுடன் தூதரக உறவுகளை துண்டியுங்கள் என்று கூறி மத்திய அரசுக்கு தந்தி அனுப்புகிறார் கருணாநிதி. ஆனால் தமிழக மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த நாடகம் போடுகிறார். இதை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளார் ஜெயலலிதா. நேற்று சங்கரன்கோவிலில், தென்காசி தொகுதி சிபிஐ வேட்பாளர் லிங்கத்தை ஆதரித்துப் பேசினார்.

பின்னர் தூத்துக்குடி சென்று அங்கு அதிமுக வேட்பாளர் சிந்தியா பாண்டியனை ஆதரித்துப் பேசினார்.

தூத்துக்குடி, பால விநாயகர் கோவில் தெருவில் நடந்த கூட்டத்தில் அழர் பேசுகையில்,

தி.மு.க. சார்பில் நேற்று நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய கருணாநிதி, மக்களின் நலனை புறக்கணித்து ஒரு குடும்பத்துக்கு மட்டும் பலன் அளிக்கக்கூடிய, அப்பாவி மீனவர்களை நிர்கதியாக்கக்கூடிய, இயற்கைக்கு வன்கொடுமை இழைக்கக்கூடிய சேதுசமுத்திர திட்டத்தை அ.தி.மு.க. எதிர்க்கிறதே என்று அங்கலாய்த்து இருக்கிறார். தன் மக்கள் நலன் என்றால் குரல் கொடுக்கிறார்.

என்ன சுயநலம். இத்தகையவர்களை தூக்கி எறிய அ.தி.மு.க.வை ஆதரியுங்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் கருணாநிதி ஏதோ பெரிய தியாகம் செய்ததாக குறிப்பிடுகிறார். 2006-ம் ஆண்டு கருணாநிதி பொறுப்பேற்ற போது அவர் என்ன செய்தார் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டுகிறேன். இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவ வீரர்கள் பயிற்சி அளிப்பதாக செய்தி வந்தவுடன் நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி இலங்கை தமிழர் பிரச்சினையில் கண்டும் காணாமல் மவுனம் காப்பதையும் சுட்டிக்காட்டினேன்.

இதைத்தொடர்ந்து மனிதசங்கிலி போராட்டம், அனைத்து கட்சி கூட்டம், எம்.பி.க்களிடம் ராஜினாமா கடிதம் வாங்குவது, சட்டசபையில் தீர்மானங்கள், சட்டமன்ற தலைவர்கள் கூட்டம், மத்திய அரசுக்கு தந்தி கொடுப்பது போன்ற பல நாடகங்கள் நடத்தப்பட்டன.

தற்போது அவர் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இல்லையென்றால் அவர்கள் உடனான தூதரக உறவை இந்திய அரசு துண்டிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கருணாநிதி தந்தி அனுப்புகிறார். இதைக்கண்டு யாரும் ஏமாற வேண்டாம்.

இத்தனை நாட்களாக இப்படி ஒரு யோசனையை மத்திய அரசுக்கு கருணாநிதி ஏன் கூறவில்லை?. தேர்தல் நேரம் என்பதால் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக நாடகம் ஆடுகிறார்.

கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி தலைமையிலான அப்போதைய இந்திய பேரரசால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்தவர் கருணாநிதிதான். கருணாநிதியால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

கச்சத்தீவை மீட்க மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

நேற்று சென்னையில் தி.மு.க.வின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் கருணாநிதி பேசி உள்ளார். இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை டி.வி.யில் கருணாநிதி பார்த்தபோது மேடையில் காங்கிரசின் கை சின்னம் இல்லையாம். அதனை தொலைபேசியில் மாவட்ட செயலாளரை அழைத்து கை சின்னத்தையும் வைக்குமாறு கூறினாராம். அவரும் சரி என்று கூறினாராம். சிறிது நேரம் கழித்து மீண்டும் தொலைக்காட்சியில் பார்த்தாராம். அப்போதும் கைசின்னம் வைக்கவில்லையாம்.

ஒரு கட்சியின் தலைவர் தன்னுடைய மாவட்ட செயலாளருக்கு ஒரு உத்தரவை போட்டு அதை கூட அவரால் செயல்படுத்தமுடியவில்லை. கட்சியையும் கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை. போலீஸ் துறையையும் கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையால் கனிம வளங்கள் சுரண்டப்பட்டு உள்ளன. அரசு அதிகாரிகளை பயன்படுத்தி கேரள மாநிலத்துக்கு மணல் கடத்தப்படுகிறது. அதனால் நிலத்தடி நீர் குறைந்து தமிழகம் வறண்ட பாலைவனம் ஆகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்ட தவறி விட்டனர். கர்நாடகம், கேரளா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் நதிநீர் பிரச்சினை தொடர்பாக எதிர்த்து போராட வேண்டியது முதல்-அமைச்சரின் கடமை. அதனை கருணாநிதி செய்யவில்லை.

தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட மிகப்பெரிய தொழிற்சாலைகளான ஸ்பிக், டாக், கனநீர் ஆலை, ஆகிய தொழிற்சாலைகள் இயங்காததால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதையும் அறிவேன். அந்த தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். தூத்துக்குடி துறைமுகத்தை ஹப் போர்ட் ஆக மாற்ற முயற்சி மேற்கொள்வேன்.

ராமநாதபுரம் பகுதியில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவையும், காவிரி படுகையில் ஏலம் விடப்படும் இயற்கை எரிவாயுவையும் தூத்துக்குடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.

தூத்துக்குடி பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கவும், நெல்லை-தூத்துக்குடி 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்கவும், தூத்துக்குடி-கோவை, தூத்துக்குடி-நாகை, தூத்துக்குடி-அருப்புக்கோட்டை-மதுரை, கன்னியாகுமரி-தூத்துக்குடி-சென்னை ஆகிய புதிய ரெயில் வழித்தடங்கள் ஏற்படுத்தவும், தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்தி விரிவாக்கவும், தூத்துக்குடி-சென்னை விரைவு ரெயில் போக்குவரத்தை தினசரி சேவையாக மாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இது மட்டுமல்லாமல் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பது போன்று, கடலோர மேலாண்மை திட்டம் மறு ஆய்வு செய்யப்படும். உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் அனைத்து கோரிக்கையையும் வென்று எடுக்க உங்கள் அன்பு சகோதரிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சங்கரன்கோவில் மற்றும் தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

நேற்றைய தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு மதுரை திரும்பினார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X