இளந்தமிழர் இயக்கத்தினர் அறையில் ரெய்ட்
ஈரோடு: மத்திய அமைச்சர் இளங்கோவனின் வீட்டை முற்றுகையிடுவோம் என அறிவித்த இளந்தமிழர் இயக்க நிர்வாகிகள் தங்கியிருந்த அறையில் போலீசார் நள்ளிரவில் சோதனை நடத்தியுள்ளனர்.
இது குறித்து இளந்தமிழர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோட்டில் திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் "காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்" என்று வேண்டுகோளுடன் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமான் "நான் பெரியாரின் கொள்கை வழிப் பேரன்" என்று பேசியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரோடு பன்னீர் செல்வம் புங்கா அருகில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் இளங்கோவன், தாம் தான் பெரியாரின் அதிகாரப்புர்வமான பேரன். பெரியார் சிறு வயதில் தவறு செய்த போது வேண்டுமானால் சீமான் பிறந்திருக்கலாம் என்ற பொருளில் பெரியாரை மிகவும் கீழ்த்தரமாக பேசியிருக்கிறார்.
பெரியாரின் அரசியல் எதிரிகள் கூட பயன்படுத்தாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்கும் இளங்கோவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை ஈரோட்டில் ஒரு தனியார் விடுதியில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இன்னும் 48 மணி நேரத்தில் இளங்கோவன் மன்னிப்புக் கேட்காவிட்டால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தச் செய்தியாளர் சந்திப்புக்குப் பின் சந்திப்பு நடந்த தனியார் விடுதியில், இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன் ஆகியோர் தங்கியிருந்த அறையை நள்ளிரவில் காவல்துறை திடீரென சோதனையிட்டனர்.
சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றாலும், போராட்ட அறிவிப்பு வெளிப்பட்ட பின், நள்ளிரவு நேரத்தில் காவல்துறை நடத்திய இச்சோதனை பல சந்தேகங்களை எழுப்புகிறது.
மேலும் தஞ்சாவூரில் அருணபாரதி, செந்தமிழன் ஆகியோரை தேடுவதாகக் கூறிக் கொண்டு இளந்தமிழர் இயக்க ஆதாரவாளர்களிடையே விசாரித்து வருகின்றனர். இளந்தமிழர் இயக்கம் வெளியிட்ட தீர்ப்பு எழுதுங்கள் எனும் குறுந்தகடுகளை பெருந்தொகையில் கைபற்றிவிட வேண்டும் என்று காவல்துறையினர் மும்முரம் காட்டுகின்றனர்.
நேற்று இரவு சம்பவத்தோடு சேர்த்து இதுவரை இளந்தமிழர் இயக்கம் தொடர்புடையை இடங்களில் இதுவரை 3 முறைகள் காவல்துறை சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
அதே நேர்தில் தந்தை பெரியார் குறித்து இளங்கோவன் பேசிய அவதூறான கருத்துகளை தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கின்றன. முதல்வர் கருணாநிதியின் மறைமுக உத்தரவின் பேரில் இந்தக் கருத்தியல் ஒடுக்குமுறை நடைபெறுகிறது.
பெரியாரின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தி, வளர்ந்து, காங்கிரசுக்கு வாக்குப் பிச்சை கேட்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எந்த முகத்துடன் இனி வாக்கு கேட்டு வருவார்? இதற்கு அவர் என்ன பதில் வைத்திருக்கிறார் என்று தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கு மேலாவது காங்கிரசுக்கு ஆதரவாக வாக்குக் கேட்பதை திராவிடர் கழகம் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் திராவிடர் கழக வரலாற்றில் அழிக்க முடியாத கறை படியும்.
மேலும் "காங்கிரசை வீழ்த்துவோம்" என்ற (www.defeatcongress.com) இணையத் தளமும் தொடங்கியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications