இலங்கை: அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும்-ஜெயந்தி

ராஜ்யசபாவில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்று ஜெயந்தி நடராஜன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு உடனடி நிவாரணங்களை அளிக்க வேண்டியது இலங்கை அரசின் கடமையாகும். அப்போதுதான் அவர்களால் உடனடியாக தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியும்.
போர்ப் பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் அப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் தங்களது வீடுகளுக்கு சுதந்திரமாக திரும்ப முடியும்.
போரினால் இடம் பெயர்ந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகள், மறு வாழ்வு நடவடிக்கைகள், நிவாரணங்களை அளிக்க இலங்கை அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அதேபோல தமிழ் மக்களுக்கு உரிய அதிகாரப்பகிர்வை அளிக்க அதிபர் ராஜபக்சே முன்வர வேண்டும். இதுகுறித்து உலக சமுதாயத்திற்கு அவர் உறுதியளித்துள்ளார். தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சத்திற்கு முடிவு கட்டப்பட்டால்தான் அங்கு அமைதி நீடித்து நிலைக்க முடியும்.
பாரபட்சம், புறக்கணிப்பு, அவமரியாதை ஆகியவற்றை போக்குவது மட்டுமே தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும்.
20,000 அப்பாவிகள் படுகொலை...
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி நாட்களில் 20 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பது வருத்தம் தருகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு ராஜபக்சே அரசு சம அந்தஸ்து வழங்குகிறதா, இல்லையா என்பதை உலக நாடுகள் உற்றுக் கவனிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ராஜபக்சே தனது உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரா என்பதை உலக சமுதாயம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் துயர நிலையை அதிமுகவும், சிபிஐயும் அரசியலாக்கி விட்டன. தேர்தலுக்காக இந்தப் பிரச்சினை குறித்து அவை விழுந்து விழுந்து பேசி வந்தன. இப்போது அமைதியாகி விட்டன. தமிழர்களின் துயரம் அவர்களுக்கு அரசியல் பகடைக் காயாகி விட்டது.
(அப்போது அதிமுக உறுப்பினர் மலைச்சாமியும், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராஜாவும் எழுந்து பதிலளிக்க முற்பட்டனர். ஆனால் அதற்கு அவைத் தலைவர் அனுமதி தரவில்லை)
இந்தியர்கள் மீதான தாக்குதல்..
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. ஆஸ்திரேலிய நிர்வாகத்தை மத்திய அரசு வலியுறுத்தி, இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தாக்குதல்களை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.
நமது நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோடும் அதிகாரத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் வழங்கியுள்ளனர்.
தீவிரவாதம்...
தீவிரவாதம் குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு போதும் மென்மையாக நடந்து கொண்டதில்லை. பொடா சட்டம் மிகக் கடுமையானதாகவும், பழிவாங்கவும் மட்டுமே பயன்பட்டது என்பதால்தான் அதை காங்கிரஸ் அரசு ஒழித்தது.
பொடா சட்டம் தவறாகவே பயன்படுத்தப்பட்டு வந்ததை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எனவே பொடா சட்டத்தில் இருந்த கடுமையான பிரிவுகளை அகற்றி விட்டு புதிய தீவிரவாத தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது என்றார் ஜெயந்தி.












Click it and Unblock the Notifications