டெல்டா விவசாயிகளுக்கு 16 மணி நேர மின்சாரம்
சென்னை: அம்பத்தூர், தாம்பரம் தாலுகாக்கள் இரண்டாக பிரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம், அம்பத்தூர் தாலுகாவின் நிர்வாக எல்லை மிகப் பெரிதாக உள்ளது. ஆந்திரா எல்லை வரை அது நீண்டுள்ளது. இதனால் அதை நிர்வகிப்பதில் பிரச்சனை நிலவுகிறது. இதனால் அதைப் பிரிக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்து வருவாய்த்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி,
புதிய தாலுகா அலுவலகம் உருவாக்கப்படுவது தொடர்பாக கடந்த ஆண்டு தாம்பரம் எம்எல்ஏவும் இதேபோல் கோரிக்கை விடுத்தார். இதனால் அம்பத்தூர், தாம்பரம் இரு தாலுகாக்களையும் பிரிக்க அடிப்படை பணிகள் நடந்து வருகின்றன.
தாம்பரம் தாலுகா எல்லையை இரண்டாக பிரிக்கும் பணி முடிவடைந்துவிட்டது. அம்பத்தூர் தாலுகா எல்லையை பிரிக்கும் பணி நடந்து வருகிறது.
அரசுக்கு இதன் பரிந்துரைகள் வந்ததும் முதல்வருடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
போதுமான டாக்டர்கள் உள்ளனராம்..:
அதே போல இன்னொரு உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்,
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை அரசு மருத்துவமனைகளில் 5,000 டாக்டர்களை நியமனம் செய்துள்ளோம். 20,000 பணியாளர்களையும் நியமித்துள்ளோம். தற்போது அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் உள்ளனர்.
டாக்டர்கள் ஓய்வுபெறும்போது ஏற்படும் காலி இடங்களையும் நிரப்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் மின்சாரம்..
சட்டசபையில் இன்று விதி 110ன் கீழ் துணை முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதில்,
இந்தாண்டில் குறுவை சாகுபடிக்கு உரிய காலத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பலர் பம்புசெட் வைத்துதான் பாசனம் செய்து வரும் நிலை உள்ளது.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட டெல்டா விவசாயிகளுக்கு தற்போது பகலில் 6 மணி நேரமும், இரவில் 4 மணி நேரமுமாக மும் முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
குறுவை சாகுபடி தடையின்றி நடைபெறுவதற்காக பகலில் இன்று முதல் 12 மணி நேரமும், இரவில் 4 மணி நேரமுமாக நாளொன்றுக்கு 16 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications