தீவிரவாதமே முதல் எதிரி: மன்மோகன்-கிலானி
ஷார்ம் எல் ஷேக் (எகிப்து): அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி சந்திப்பு இன்று நடந்து முடிந்தது. இரு தரப்புக்கும் இடையே தோழமை உணர்வுடனும், இதயப்பூர்வமாகவும் பேச்சு நடந்ததாக இரு நாட்டு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணி சேரா நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறுகிறது.
இதற்காக மன்மோகன் சிங் அங்கு சென்றுள்ளார். அதேபோல பாகிஸ்தான் சார்பில் அந்த நாட்டு பிரதமர் கிலானி வந்துள்ளார்.
இரு தலைவர்களும் இன்று சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், வெளியுறவுத்துறை செயலாளர்கள், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
சந்திப்புக்குப் பிந்னர் இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இதயப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக இரு தலைவர்களும் அந்த கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தானுக்கு தீவிரவாதம்தான் பெரும் மிரட்டல் என்பதை இரு நாடுகளும் ஒப்புக் கொள்வதாக தெரிவித்த அவர்கள், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து இரு தலைவர்களும் எதுவும் குறிப்பிடவில்லை.
தீவிரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர்ப் பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் எதுவும் தெரிவிக்கவில்லை.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் வலியுறுத்தினார். அதற்கு கிலானி பதிலளிக்கையில், பாகிஸ்தான் தனது அதிகாரத்திற்குட்பட்டு என்ன நடவடிக்கையையெல்லாம் எடுக்க முடியுமோ, அதையெல்லாம் செய்யும் என்று உறுதியளித்தார்.
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் விடப்படும் தீவிரவாத மிரட்டல்கள் குறித்த தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது எனவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications