வாக்குச் சீட்டு முறைக்கும் நாங்கள் தயார்-திமுக
சென்னை: மின்னணு வாககுப் பதிவு எந்திரங்களில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
சட்டசபையில் பொதுத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் கருணாநிதியின் சார்பில் அமைச்சர் அன்பழகன் பதில் அளித்தார். அவர் கூறுகையில்,
கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியல் சரியில்லை, பல பெயர்கள் விடுபட்டுவிட்டன என்று கூறப்பட்டது. ஒவ்வொரு தேர்தலின்போதும் இது போன்ற குறைகள் வருகின்றன. மீண்டும் பட்டியலை சரிசெய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது.
தேர்தல் தோல்வி பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்கிறார்கள். மின்னணு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் இது போன்ற எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்னணு எந்திரத்தில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்து இருக்கிறது. இனியும் எந்திரம் தான் பயன்படுத்தப்படவுள்ளது.
ஓட்டுப் பதிவு நடக்கும் இடத்தில் கட்சி ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். இதனால் இதில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை.
நடைபெற இருக்கும் 5 சட்டசபை இடைத் தேர்தல்களிலும் வாக்குப் பதிவுக்கு மின்னணு எந்திரமே பயன்படுத்தப்படும். இதில் சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். கருத்து வேறுபாடுகள் தான் ஜனநாயக வளர்ச்சிக்கு அடிப்படை.
எந்திரம் தேவையில்லை வாக்குச் சீட்டுகள் தான் வேண்டும் என்றால் அதையும் நாங்கள் பார்த்தவர்கள் தான் என்றார் அன்பழகன்.


Click it and Unblock the Notifications
