ஸ்வைன் ப்ளூ-மும்பை, புனே செல்ல வேண்டாம்!

புனேயில் பன்றிக் காய்ச்சலுக்கு 14 வயது சிறுமி பலியானதையடுத்து நாடு முழுவதும் மாநில அரசுகளை மத்திய சுகாதாரத் துறை உஷார்படுத்தியுள்ளது.
இதையடுத்து மும்பை, புனே, சதாராவிலிருந்து சென்னை உள்பட பிற நகரங்களுக்கு வருவோர் மூலம் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை எடுத்துள்ளது.
விமான நிலையங்கள், சென்னை சென்ட்ரல், மதுரை, கோவை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் மும்பையிலிருந்து வரும் பயணிகளிடம் பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளதா எனக் கேட்டறிந்து சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை அலுவலகத்தில் அதன் இயக்குனர் டாக்டர் இளங்கோ தலைமையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு அவசரக் கூட்டம் இன்று நடந்தது.
பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய நடந்த இக் கூட்டத்தில் ரயில்வே, விமான நிலைய ஆணையம், மாநகராட்சி சுகாதாரத் துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கிங்ஸ் இன்டிடியூட், வேலூர் சிஎம்சி மற்றும் புதுச்சேரியி்ன் ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றுக்குத் தான் ஸ்வைன் ப்ளூ பரிசோதனைகள் நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பரிசோதனையை நடத்துவதாக தமிழகத்தில் உள்ள பல ரத்தப் பரிசோதனை நிலையங்களும் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துள்ளன. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நலத்துறைச் செயலாளர் சுப்புராஜ் எச்சரித்துள்ளார்.
இந்த தனியார் பரிசோதனை நிலையங்களில் ஸ்வைன் ப்ளூ வைரஸை கண்டறியும் சாதனங்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 750க்கு பரிசோதனை செய்கிறோம் என்று கூறிக் கொண்டு இவை ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் மொத்தம் 7.51 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் சென்னை துறைமுகத்தில் 6,695 பயணிகளும் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 230 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதாகச் சந்தேகிக்கப்பட்டு, அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. பரிசோதனையில் 35 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 32 பேர் முற்றிலும் குணமாகி வீடு திரும்பி விட்டனர்.
கடந்த இரண்டு தினங்களில் சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் இரண்டு பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதியாகி, சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 2 பேருக்கு பாதிப்பு
இந்த நிலையில்,சிங்கப்பூரிலிருந்து இன்று காலை காலை சென்னை வந்த ராஜன் சேகர் (25), சைமன் மிக்கேல் ஜோசப் (35) ஆகிய இருவரும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரும் சென்னையச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தியாவில் மேலும் 16 பேருக்கு பாதிப்பு
இதற்கிடையே இந்தியாவில் இன்று மட்டும் மேலும் 16 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. இதன் மூலம் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 574 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை டெல்லிக்கு வந்த 3 பேருக்கும், புனேவில் 6 பேருக்கும், சென்னை, மும்பை, கர்காவன் ஆகிய நகரங்களில் தலா 2 பேருக்கும், திருவனந்தபுரத்தில் ஒருவருக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புனேவில் பாதிக்கப்பட்ட 6 பேரில் 3 பேர் பள்ளிச் சிறார்கள் ஆவர்.
தொடர்பான செய்திகள்:












Click it and Unblock the Notifications