காஞ்சியில் அதிமுக பிரமுகர் மீது பயங்கர தாக்குதல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கள்ளச் சாராய வியாபாரியை 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொன்று சென்றபோது மீண்டும் அந்தக் கும்பல் வழிமறித்து வெட்டியது.
காஞ்சிபுரத்தை அடுத்த புஞ்சை அரசன்தாங்கல் திருவள்ளூவர் குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணன் (33). இவர் முன்பு சாராய வியாபாரம் செய்து வந்தார். தற்போது ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். அப் பகுதி அதிமுக பிரமுகரும் ஆவார்.
கிருஷ்ணன் இன்று காலை அப்துல்லாபுரம் அருகே பைக்கில் வந்தபோது, மற்றொரு பைக்கில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.
ஆனாலும் அவர்களிடமிருந்து தப்பிய கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், வெட்டுக் காயங்கள் மிக பலமாக இருந்ததால் அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.
வெள்ள கேட் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது ஒரு குவாலிஸ் காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஆம்புலன்சை வழிமறித்து அதிலிருந்த கிருஷ்ணன், அவரது உறவினர்களான கண்ணன் பெருமாள், குமார் மற்றும் டிரைவர் ஆகியோரை சரமாரியாக வெட்டினர்.
இதில் அனைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
இதையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட நால்வரும் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்துக்குச் சென்றனர். அவர்களை போலீஸார் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications