கம்பம் தொகுதி பாஜக வேட்பாளர் திமுகவுக்குத் தாவினார்
தேனி: கம்பம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் எம்.சசிக்குமார் என்பவர் அதிரடியாக திமுகவுக்குத் தாவினார்.
கம்பம் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர் சசிக்குமார். இவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை கம்பம் தொகுதியில் தங்கியிருந்த மத்திய அமைச்சரும், திமுக தென் மாவட்ட அமைப்பாளருமான மு.க.அழகிரியை திமுக அலுவலகத்திற்கு வந்து சந்தித்து தான் திமுகவில் சேருவதாக தெரிவித்தார் சசிக்குமார். அழகிரிக்கு சால்வையும் அணிவித்தார்.
அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட திமுக செயலாளர் மூக்கையா ஆகியோரும் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சசிக்குமார் பேசுகையில், பாஜகவின் அரசியல் நல்லதாக இருந்தாலும் கூட மக்களின் அங்கீகாரம் அதற்குக் கிடைக்கவில்லை.
பாஜகவின் கொள்கைகளை தமிழக அரசின் திட்டங்கள் முந்திக் கொண்டு விட்டன.
மு.க.அழகிரி மனு நீதி சோழனாக திகழ்கிறார். அவரது செயல்பாடுகள் என்னைக் கவர்ந்து விட்டன. எனவேதான் பாஜகவிலிருந்து விலகும் முடிவை எடுத்தேன் என்றார்.
நேற்று முன்தினம் வரை சசிக்குமார் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிக்குமார் பாஜகவில், உத்தமபாளையம் ஒன்றிய பொதுச் செயலாளராக இருந்தார். 2006ம் ஆண்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications