டாக்டர்கள் கூறியபடி டாமிப்ளூ சாப்பிட்ட இந்தியப் பெண் பலி!
லண்டன்: இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொலைபேசியில் டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறியபடி டாமிப்ளூ மாத்திரையை சாப்பிட்டார். ஆனால் 12 மணி நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை, மாறாக 'மெனி்ஞ்சிடிஸ்' காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என்று தவறாக கருதி டாக்டர்கள் டாமிப்ளூவை சாப்பிடச் சொன்னதால் ஏற்பட்ட விளைவு இது.
லீசஸ்டர் நகரில் உள்ள கிழக்கு மிட்லான்ட்ஸ் பகுதியில் வசித்து வந்தார் ஜஸ்வீர் கெளர். 48 வயதான இவருக்கு தொண்டை வலியும், வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து போன் மூலம் டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அவர்களோ, கெளருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி, டாமிப்ளூ மாத்திரயை சாப்பிடுமாறு பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து அவர் டாமிப்ளூ மாத்திரை சாப்பிட்டுள்ளார்.
ஆனால் அடுத்த 12 மணி நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நான்கு நாள் கழித்து அவர் உயிரிழந்தார்.
மெனிஞ்சிடிஸை ஏற்படுத்தும் பாக்டீரியாவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்தது. தவறான மருந்தாக டாமிப்ளூவை சாப்பிட்டதால் கெளர் உயிரிழக்க நேரிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கெளரின் மகன் சுக்வீந்தர் கில் கூறுகையில், இப்போது எதை எடுத்தாலும் பன்றிக் காய்ச்சல் என்றுதான் டாக்டர்களுக்குத் தோன்றுகிறது. தலைவலி வந்தால், காய்ச்சால் வந்தால், தொண்டை வலித்தால் உடனே டாமிப்ளூவை சாப்பிடச் சொல்கிறார்கள்.
ஆனால் எனது தாயாருக்கு வந்தது மெனிஞ்சிடிஸ். அதுகுறித்து டாக்டர்களுக்கு யோசனையே வராதது அதிர்ச்சி அளிக்கிறது என்றார் சோகத்துடன்.


Click it and Unblock the Notifications
