குளித்தலை திமுக எம்.எல்.ஏ வை முற்றுகையிட்ட மக்கள்
குளித்தலை: குளித்தலை அருகே நங்கவரத்தில் திமுக எம்.எல்.ஏ மாணிக்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஊரக மருந்தகத்தின் செயல்பாடு குறித்து குற்றம் சாட்டினர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நங்கவரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தி.மு.க ஒன்றிய செயலாளர் சந்திரன் மற்றும் கட்சி பிரமுகர்களுடன் குளித்தலை தொகுதி திமுக எம்.எல்.ஏ மாணிக்கம் சென்றார்.
அப்போது, அப்பகுதி மற்றும் சுற்றுப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பலர் திமுக எம்.எல்.ஏ மாணிக்கத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் ஊரக மருந்தகத்தின் டாக்டர், நர்ஸ்கள் உள்ளிட்ட பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்து சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஊரக மருந்தகம் மற்றும் மருத்துவமனையை எம்.எல்.ஏ மாணிக்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பணியில் டாக்டர் இல்லாததும், பொதுமக்களுக்கு, மருந்து, மாத்திரை முறையாக வழங்கப்படாததும் தெரிய வந்தது.
இது குறித்து எம்.எல்.ஏ மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனைக்கு கூடுதல் மருந்துகள் வழங்கவும், டாக்டர் உள்ளிட்ட பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வந்து முறையாக பணியாற்ற கலெக்டரிடம் பேசி உறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications