மிளகாய்ப் பொடியைத் தூவி ரூ. 6 கோடி நகை கொள்ளை
நாகர்கோவில்: கொல்லங்கோடு அருகே நகை கடை அதிபர், ஊழியர் முகத்தில் மிளகாய்பொடி வீசி 500 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான பிலா மூட்டுகடையில் ஜெய்ஹிந்த் என்ற பெயரில் நகைக் கடை உள்ளது.
நேற்று இரவு 9 மணி அளவில் கடை உரிமையாளர் வாமதேவன், ஊழியர் லால் ஆகியோர் கடையை பூட்டி விட்டு பைக்கில் வீடு திரும்பினர். கடையை பூட்டும்போது பாதுகாப்பிற்காக நகையை வீட்டிற்கு கொண்டு செல்வது வழக்கம். இதே போல் நேற்று 500 பவுன் நகைகளை அவர்கள் எடுத்து வந்தனர்.
பிலாமுட்டுகடை அருகே உள்ள நேதாஜி படிப்பகம் அருகேயுள்ள சாலை திருப்பத்தில் பைக் வந்தபோது அங்கு எதிரே நடந்து வந்த 4 பேர் திடீரென கையில் இருந்த மிளகாய் பொடியை இவர்கள் முகத்தில் வீசினர்.
இதில் தடுமாறிய வாமதேவன், லால் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது கொள்ளையர்கள் வாமதேவனின் தலை மற்றும் காலில் அரிவாளால் வெட்டினர். கடை ஊழியர் முகத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது.
பின்னர் அவர்கள் பைக்கில் வைத்திருந்த 500 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். சுமார் 4 கிலோ எடை உள்ள கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications
