தினமலர் செய்தி ஆசிரியர் கைதால் திரைத் துறையினர் திருப்தி - கருணாநிதி
சென்னை: நாளிதழ் செய்தி ஆசிரியர் மீதான திரைத்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதால் திரைத் துறையினர் திருப்தி அடைந்துள்ளனர். இதனால் சமரசமாக போகவும் அவர்கள் விரும்புகின்றனர். இதனையெல்லாம் மனதில் கொண்டுதான், செய்தி ஆசிரியர் மீதான ஜாமீன் மனுவிலே அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருக்கக் கூடும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை..
கேள்வி: ஒரு நாளிதழின் செய்தி ஆசிரியரின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மைதானா?
பதில்:- அந்த நாளிதழில் விரும்பத்தகாத ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதற்காக திரைப்படத் துறையினர் போராட்டம் நடத்தினார்கள். அந்த செய்தி விரும்பத்தகாத செய்தி என்பதை அந்த நாளிதழே புரிந்து கொண்டு, அந்த செய்தி வெளிவந்த மறுநாளே வருத்தம் தெரிவித்து ஒரு செய்தியினையும் வெளியிட்டது. அவர்கள் செய்த தவறை அவர்களே புரிந்துகொண்டார்கள்.
வெளிவந்த செய்தி தரக்குறைவானது என்பதால், திரைப்படத் துறையினர் செய்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. திரைப்படத் துறையினர் அந்த கைது நடவடிக்கையில் திருப்தி அடைந்ததோடு, இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய துறை என்பதால், மேல் நடவடிக்கை தேவையில்லை என்பதிலும், சமரசமாக போய் விடலாம் என்ற எண்ணம் கொண்டிருப்பதாகவும் தெரிந்தது. இதனையெல்லாம் மனதில் கொண்டுதான், செய்தி ஆசிரியர் மீதான ஜாமீன் மனுவிலே அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருக்கக்கூடும் அல்லவா?
பத்திரிக்கையாளர் என்பதில் ஏன் ஐயம்?
கேள்வி: கருணாநிதி பத்திரிகையாளரா? நடிகரா? என்று சிலர் கேட்டிருப்பது பற்றி?
பதில்: 1942-ம் ஆண்டிலேயே முரசொலி இதழை நடத்த தொடங்கியவனைப் பற்றி பத்திரிகையாளரா என்ற ஐயம் அந்த சிலருக்கு எழுந்தது ஆச்சரியம்தான். ஆனால் பத்திரிகையாளர் என்றால், யாரைப் பற்றியும் எது வேண்டுமானாலும் எழுதலாம் என்பதை அந்த சிலர் ஏற்றுக்கொள்கின்றனரா?
குறிப்பாக அந்த கேள்வியை எழுப்பிய அவர்கள் வீட்டுப் பெண்மணிகளைப் பற்றி தரக்குறைவாக ஏடுகளில் விமர்சனம் வந்தால், அதை எழுதியது பத்திரிகையாளர் என்று அந்த சிலர் கண்டனம் எழுப்பாமல் இருந்து விடுவார்களா? தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தானா? என்று கருணாநிதி கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
