முத்துவேலர், அஞ்சுகம் அம்மாள் சிலைகளை திறக்க ஸ்டாலின் மறுப்பு
ராதாபுரம்: நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதேசமயம், அந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதியின் பெற்றோரான முத்துவேலர்- அஞ்சுகம் அம்மாள் சிலைகளைத் திறக்க அவர் மறுத்து விட்டார்.
ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு முத்துவேலர் - அஞ்சுகம் அம்மாள் பெயர் வைப்பதாக இருந்தது. பஸ் நிலைய வளாகத்தில் அவர்களின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
இருப்பினும் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர்தான் சூட்ட வேண்டும் என்று கட்சி பாகுபாடின்றி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக போராட்டங்களும் வெடித்தன.
இதையடுத்து பஸ் நிலையத்திற்கு முத்துவேலர்- அஞ்சுகம் அம்மாள் பெயரும், அதையொட்டி உள்ள புதிய வணிக வளாகத்திற்கு காமராஜர் பெயரும் சூட்டப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந் நிலையில் இன்று ராதாபுரம் வந்த ஸ்டாலின் பஸ் நிலையத்தைத் திறந்து வைத்தார். அதேசமயம், பஸ் நிலையத்திற்கு முத்துவேலர்- அஞ்சுகம் அம்மாள் பெயர் சூட்டப்படவில்லை. மேலும், முத்துவேலர்- அஞ்சுகம் அம்மாள் சிலைகளைத் திறக்கவும் ஸ்டாலின் மறுத்து விட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
முன்னதாக இன்று காலை வள்ளியூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின் முன்னிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.
இன்று மாலை சங்கர் நகரில் நடைபெறும் புதிய தொழிற்சாலைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
நாளை, தென்காசியில் புதிய ரயில்வே மேம்பால அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் கடையநல்லூர் சென்று அங்கு புதிய அரசு மருத்துவமனைக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications