நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன - கருணாநிதி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரால், எதை வேண்டுமானாலும் எழுதலாம் - எப்படி வேண்டுமானாலும் படம் போடலாம் - யாரை வேண்டுமானாலும் அவர்களுக்குரிய மானம், மரியாதைக்கு மாசு ஏற்படும் வகையில் எழுதலாம், பேசலாம் என்று எவர் ஒருவரும் கருதிக் கொண்டு "என் வழி இதுதான்'' என்று வழி மீறுவார்களானால் - அதுபற்றிய முறையீடு பாதிக்கப்பட்டவர்களால் தெரிவிக்கப்படும் பொழுது - அதை எந்தவொரு அரசும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க முடியாது.
அப்படிப்பட்ட நேரத்திலேகூட இந்த அரசினால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் பத்திரிகைகளை எதிர்த்து மூர்க்கத்தனமாகவோ, முரட்டுத்தனமாகவோ இதுவரை எடுக்கப்பட்டதாக யாரும் கூறமுடியாது. ஏன் இத்தகைய மென்மையான அணுகுமுறையை - அதேநேரத்தில் இரு சாராருக்கிடையே பகை பரவிடக் கூடாது என்ற பரந்த நோக்கத்தோடு எச்சரிக்கையாக கையாளும் அணுகுமுறையை - என் மீது வேண்டுமென்றே குறைகூற விரும்புவோர் கடுமையாக விமர்சிப்பதையும் நான் புரிந்து கொள்ளாமல் இல்லை.
பத்திரிகையாளர்களுக்கு நான் நண்பன் என்பதால்தான் அவர்கள் எழுப்புகின்ற கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றி வந்திருக்கிறேன். இன்றைய பத்திரிகையாளர்களுக்கு நான் அவ்வப்போது விடுக்கின்ற வேண்டுகோளும் - இப்போது விடுக்கின்ற வேண்டுகோளும் "உரிமைக்கு வாதிடுங்கள் - உண்மைகளை வெளியிடுங்கள்'' என்பதுதான். "எதையும் மிகைப்படுத்தாதீர்! எவருக்கிடையிலும் பகை மூட்டாதீர்!'' என்பதுதான்.
உதாரணமாக இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் துன்ப துயரங்களை வேண்டுமென்றே பெருக்கிக் காட்டுவதால் சில நேரங்களில் விபரீதங்கள் ஏற்பட்டுவிடக்கூடும் அல்லவா? அதனால்தான், எதையும் மிகைப்படுத்தாதீர்! என்று வேண்டுகோள் விட வேண்டியிருக்கின்றது.
அண்மையில் ஏற்பட்ட புயல், மழை, கடும் வெள்ளம் இவற்றின் காரணமாக தமிழகத்திலே ஒரு சில மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு - குறிப்பாக நீலகிரி மாவட்டம் அழகிழந்து - நிலைகுலைந்து அங்குள்ள மக்கள் வேதனைக்கு உள்ளானபோது - இந்த அரசு அதனை ஒருக்கணம் கூட வேடிக்கை பார்க்காமல் - வேகமாக நிவாரணப் பணிகளை எப்படி ஆற்றியது என்பதை அந்த மலை பகுதியிலே வாழ்கின்ற மக்கள் மிகத்தெளிவாக அறிவார்கள்.
நாற்பதுக்கு மேற்பட்ட உயிர்களை கொள்ளை கொண்ட அந்தக் கொடுமையான நிகழ்வு, தொடங்கியபோதே நான் துடித்துப் போய் - நமது அமைச்சர்களாம் வீரபாண்டி ஆறுமுகத்தையும், பொங்கலூர் பழனிசாமியையும் உடனடியாக அங்கே சென்றிடுமாறு கேட்டுக் கொண்டேன். ஹெலிகாப்டரிலே அவர்கள் செல்வதற்கு முயன்றும்கூட, அந்த மழையில் ஹெலிகாப்டர் போகாது என்று தெரிவித்துவிட்ட காரணத்தால் அந்தச் சாலையிலே அந்தப் பகுதியில் எந்தப் பயங்கரம் நிகழுமோ என்பதைப்பற்றி கூட கவலைப்படாமல் அந்த அமைச்சர்கள் சாலையிலே பயணம் செய்து ஏற்கனவே அங்கே முகாமிட்டிருந்த அமைச்சர்கள் ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோருடன், அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான ஆ.ராசாவுடன் மற்றும் குண்டன், முபாரக், சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ., ஆகியோருடன் சேதமடைந்த பகுதிகளையெல்லாம் சுற்றிப்பார்த்து நிவாரணப் பணிகளைத் தொடங்கச் செய்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச்சென்று அங்கும் உரிய நிவாரணங்களை அரசின் சார்பிலே அளித்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.
எவ்வளவு ஆபத்தான இடத்தில் - எந்த நேரத்தில் அந்த இடம் சரியுமோ என்றுள்ள இடத்தில் தங்களைப் பற்றி கவலைப்படாமல், அமைச்சர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை புகைப்படம் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் சிலர் எந்த உண்மையையும் தெரிந்து கொள்ளாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதைப் போல இரண்டு அமைச்சர்களைத் தவிர வேறு யாரும் செல்லவில்லை, பாதிக்கப்பட்டவர்களை யாரும் சென்று பார்க்கவில்லை என்றெல்லாம் அறிக்கை விட - அதையும் உண்மையை அறிந்த பத்திரிகையாளர்கள் கொட்டை எழுத்துக்களிலே வெளியிடுகின்றார்கள்.
அந்தப் பத்திரிகைகள் உண்மைகளை வெளியிட வேண்டாமா? அரசுக்கு எதிரான செய்தி என்பதற்காக எதையும் வெளியிட்டு விடலாமா? நன்றாகத் தெரிந்து - உண்மையில்லாத செய்திகளை வெளியிடுவதில்லை என்று பத்திரிகைகள் முடிவெடுத்து விட்டால், பின்னர் அறிக்கை விடுபவர்களே உண்மையில்லாத செய்திகளை வெளியிடுவதை நிறுத்தி விடுவார்கள்.
ஏற்பட்ட பாதிப்புகளை களைவதற்கான பணியில் தீயணைப்புத் துறையினர், மீட்பு குழுவினர், மின்வாரியத் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக கிடைத்த தகவலின்படி அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக 700 வீடுகள் சேதமடைந்துள்ளன.
துணை ராணுவத்தின் பேரிடர் துயர் நீக்க பிரிவில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவும், தேசிய பேரிடர் மீட்பு படைப் பிரிவின் இன்ஸ்பெக்டர்கள் அருண் குமார், பூட்மாங்கே பிரசாந்த் ஆகியோரது தலைமையில் 76 பேர் சீரமைக்கும் பணியிலே ஈடுபட்டுள்ளார்கள்.
வருவாய்த் துறை ஆணையாளர் சுந்தரதேவன், தீயணைப்புத் துறை இயக்குநர் நடராஜ், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறவும், நிவாரணப் பணிகளை ஊக்கப்படுத்தவும் அனுப்பி வைத்தேன்.
இவர்களுக்கு முன்பாகவே மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கோவிந்தனை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி மாவட்ட ஆட்சியரோடு இருந்து நிவாரணப் பணிகளிலே ஈடுபடுமாறு அறிவுறுத்தினேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் உடனடியாக வழங்கக் கூறினேன்.
12-11-2009 அன்று காலை 10 மணியளவில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மத்திய அமைச்சர் ஆ.ராசா தலைமையில், மாநில அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றுள்ளது.
அந்தக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் கலந்து கொண்ட உதகை கோட்ட மேலாளர், 50 விழுக்காடு பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருவதாகவும், மீதி பேருந்துகள் விரைவில் இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்துப் பேருந்துகளையும் விரைவில் இயக்கிட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று அந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்வாரியத் துறை சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட உதகை மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர், நீலகிரி மாவட்டத்தில் 95 விழுக்காடு மின் விநியோகம் வழங்கப்பட்டு விட்டது என்றும், மீதம் உள்ளவை மூன்று நாட்களில் வழங்கப்பட்டுவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சேதமடைந்த மின்கம்பங்களுக்குப் பதிலாக வெளிமாவட்டங்களிலிருந்து உடனடியாக அவற்றைக் கொண்டு வரவும், சாலை துண்டிக்கப்பட்ட இடங்களில் தலைச்சுமையாகவே அவற்றைக் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்வாரியம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேட்டுப்பாளையம் - உதகை சாலை துண்டிக்கப்பட்டு விட்டதால், மைசூர் வழியாகவோ அல்லது பாலக்காடு வழியாகவோ தேவையான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை தடங்கலின்றி கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியதற்கிணங்க - இந்த அத்தியாவசியப் பொருட்கள் உடனடியாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டு தற்போது அவைகள் கிடைக்கின்றன.
பால் விநியோகம் தடைபடாமல் பார்த்துக்கொள்ள ஆவின் மேலாண்மை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரும், ஆவின் மேலாண்மை இயக்குநரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் பால் விநியோகம் நடைபெறுவதை உறுதி செய்துகொள்ள வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்குத் தேவைப்படும் பால் பொருட்கள் தடங்கலின்றி கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் குழாய்கள் வெள்ளத்தால் பெரும்சேதம் அடைந்துவிட்ட காரணத்தினால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நகராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்களுக்கும் பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் உதவி இயக்குநர், பேரூராட்சிகள் மற்றும் உதவி இயக்குநர், கிராம பஞ்சாயத்து ஆகியோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சேதமடைந்த குழாய்களை உடனடியாக மாற்றி புதிய குழாய்கள் பொருத்தப்பட வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டிகள் சேதம் அடைந்திருந்தால், அப்பகுதிகளில் சிண்டெக்ஸ் தொட்டிகள் வைத்து குடிநீர் வழங்க வேண்டு மென்றும் உறுதியாகக் கூறப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியர் (பஞ்சாயத்து வளர்ச்சி) மேற்பார்வையிடவும் சொல்லப்பட்டுள்ளது.
வெள்ள சேதம் காரணமாக தொற்றுநோய் எதுவும் ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குநர் சார்பில் தெரிவிக்கப்பட்டு, வெள்ள நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்திடவும், மருத்துவ வசதிகள் கிடைத்திடவும் உரிய அலுவலர்களை நியமிக்கவும், தேவையான மருந்துகளை உடனடியாக வழங்கிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சாலை ஓரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய மரங்களை உடனடியாகக் கண்டறிந்து அவற்றை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பெருமளவு பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. அதற்கான விவரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை தரும்படி அதிகாரிகளுக்குக் கூறப்பட்டுள்ளது. அதுபோலவே கால்நடை சேதம் குறித்த விவர அறிக்கையினை சேகரித்திட உதகை கால்நடைத் துறை உதவி இயக்குநருக்குச் சொல்லப்பட்டுள்ளது.
அரசு சார்பில் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள பணித்ததோடு - கட்சி ரீதியாகயும் நிவாரணப் பணிகளிலே ஈடுபடும்படி சொல்லப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களிலேயே தி.மு.க. சார்பில் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 கம்பளி போர்வைகளும், உணவுப் பொருட்களும், பால், ரொட்டி, வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி முழுமையாக 55 வீடுகளும் - பகுதியாக 909 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண உதவியாக இதுவரை 476 பேருக்கு 9 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் 488 பேருக்கு 9 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு 1808 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 610 குடும்பங்களைச் சேர்ந்த 1808 பேர் 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். 30 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 105 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளன.
மழையினால் தகர்ந்த சாலைகள் சரி செய்யப்பட்டு விட்டது. மீண்டும் போக்குவரத்து தொடங்கிவிட்டது. இயல்பான வாழ்க்கை அமைந்துவிட்டது என்ற செய்திகள் வந்தும் கூட இன்னும் சில ஏடுகளில் அங்கே எதுவுமே நிவாரணப் பணிகள் நடக்கவில்லை என்பதைப் போல சிலர் விடுத்துள்ள அறிக்கைகள் பெரிய அளவில் பிரசுரிக்கப்பட்டிருப்பதைக் காணுகிறேன்.
இதுபோலவே, மீனவர்கள் எழுநூறு பேரைக் காணவில்லை என்ற பரபரப்பான செய்தி சில தொலைக்காட்சிகளிலும் ஏடுகளிலும் வெளிவந்ததும், நான் அதிர்ந்து போய் அதைப்பற்றி விசாரிக்கச் சொல்ல; மொத்தமே காணாமல் போனவர்கள் எட்டு பேர்தான் என்றும், அதிலும் நான்கு பேர் திரும்பி விட்டார்கள் என்றும் செய்தி கிடைத்தபோது, பத்திரிகைகள் எல்லாம் இப்படி பரபரப்பாக தவறான செய்தியை அவசரப்பட்டு மிகைப்படுத்தி வெளியிடுகிறார்களே என்று எண்ணி வருந்தினேன். அந்த வருத்தங்களையெல்லாம் புறந்தள்ளி விட்டுத்தான் நாம் நம் வழியில் பயணத்தைத் தொடர வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications