ராணா ஜாமீன் மனு-விசாரணை தள்ளிவைப்பு

Subscribe to Oneindia Tamil

சிகாகோ: இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத சதித் திட்டம் தீட்டி கைது செய்யப்பட்டுள்ள தஹவூர் ராணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு அமெரிக்க கோர்ட் தள்ளி வைத்துள்ளது.

அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார் ராணா. தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி சிகாகோவில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நான் நோலான் டிசம்பர் 15ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார். ராணாவுக்கு எதிராக எப்பிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை தான் முழுமையாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளதால் டிசம்பர் 15ம் தேதி விசாரணை நடைபெறும் என அவர் அறிவித்தார்.

முன்னதாக ராணாவின் ஜாமீன் மனு நீதிபதி நோலான் முன்பு விசாரணைக்கு வந்தபோது ராணாவின் வழக்கறிஞர் பாட்ரிக் பிளீகன் மூன்று நடத்தை சாட்சியங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

ராணாவின் மைத்துனர் உள்ளிட்ட 3 பேர் ராணாவின் நடத்தை குறித்து அளித்துள்ள சாட்சியங்கள் இவை.

அதில், ராணா மிகவும் அமைதியானவர், நம்பகமானவர், வன்முறை மீது நம்பிக்கை இல்லாதவர், கெளரவமானவர், அதிர்ந்து கூட பேசாதவர் என்று தெரிவித்துள்ளனர் 3 பேரும்.

இந்த சாட்சியங்கள், அரசுத் தரப்பில் தரப்பட்டுள்ள ஆவணங்கள், மேலும், எப்பிஐ விசாரணையின்போது ராணா அளித்த ஐந்து மணி நேர வாக்குமூலத்தின் வீடியோ காட்சி ஆகியவற்றைப் பரிசீலிக்க வேண்டியிருப்பதால் டிசம்பர் 15ம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதி பின்னர் அறிவித்தார்.

1 மில்லியன் டாலர் உத்தரவாதம் தர ராணா தயார்...

முன்னதாக ஜாமீன் உத்தரவாதத் தொகையாக 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உத்தரவாதத்தை அளிக்க தாங்கள் தயாராக இருப்பதாக நீதிபதியிடம் ராணாவின் வழக்கறிஞர் பாட்ரிக் தெரிவித்தார்.

இதுகுறித்து பாட்ரிக் கூறுகையில், எப்.பி.ஐ தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கும், ராணாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

அவரை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர் தப்பி விடுவார் என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அமெரிக்காவில் அவர் தங்குவதற்கு ஆறு வீடுகள் உள்ளன. மேலும் 1 மில்லியன் டாலர் வரைக்கும் ஜாமீன் உத்தரவாதம் தர ராணா தயாராக உள்ளார்.

ராணா ஜாமீனில் வந்த பிறகு தப்ப முயன்றால் அது அவரது குடும்பத்தினரை கடுமையாக பாதிக்கும் என்பது ராணாவுக்கும் தெரியும். அவரும் தங்கும் இடம் இல்லாமல் அலைய நேரிடும். வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவை முடக்ப்படும். குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும் அபாயம் உள்ளது. இவை அனைத்தும் ராணாவுக்குப் புரியும். எனவே அவர் தப்பிச் செல்ல வாய்ப்பே இல்லை.

ராணாவுக்கு பல கடுமையான நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதிக்கலாம். வீட்டுக் காவல், மின்னணு சாதனங்களை வைத்து அவரது செயல்பாடுகளைக் கண்காணிப்பது, தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த தடை விதிப்பது, என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஜாமீன் அளிக்கலாம் என்றார் பாட்ரிக்.

ஆனால் ராணாவுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று கோரி அரசுத் தரப்பில் வாதிடுகையில், ராணா மீதான குற்றச்சாட்டுக்கள் மிகக் கடுமையானவை. மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பினருடன் ராணா தொடர்பு வைத்துள்ளார். இது சாதாரண குற்றச்சாட்டு இல்லை.

இவருக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்து ஜாமீன் அளித்தாலும் கூட தப்பிப் போக மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இவருக்கு வெளிநாட்டில் வீடு உள்ளது. வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகள் உள்ளன. எனவே இவரை ஜாமீனில் விடுவிப்பது மிகவும் அபாயகரமானது என்று வாதிடப்பட்டது.

ராணா மீது தீவிரவாத சதிச் செயல் ஒன்றுக்குத் தேவையானவற்றை அளித்தது, அந்த சதிச் செயலுக்குத் துணை போனது என இரு பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+