For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் - பிரசாரம் ஓய்ந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது.

திமுக, அதிமுக, தேமுதிக ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளபோதிலும், திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி காணப்படுகிறது. இரு தொகுதிகளில் தேர்தல் நடந்தாலும் கூட வந்தவாசி படு அமைதியாக காணப்படுகிறது. திருச்செந்தூரில்தான் அனல் பறந்தது.

திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக), அம்மன் நாராயணன் (அதிமுக), கோமதி கணேசன் (தேமுதிக) உள்பட 25 பேர் களத்தில் உள்ளனர். வந்தவாசியில் திமுக சார்பில் கமலக்கண்ணன், அதிமுக சார்பில் முனுசாமி, தேமுதிக சார்பில் ஜனார்த்தன் உள்பட 14 வேட்பாளர்கள் உள்ளனர்.

இரு தொகுதிகளிலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, நிதியமைச்சர் அன்பழகன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்துள்ளனர்.

படு விறுவிறுப்பாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. நாளை ஓய்வு நாளாகும். 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

திருச்செந்தூரில் பல இடங்களில் மோதல், அடிதடி, வாக்கு சேகரிப்பு மையங்களுக்கு தீ வைப்பு, கார்கள் உடைப்பு, வாக்களர்களுக்கு பணம் கொடுத்து கைது, கட்சிகளுக்கு சப்ளை செய்ய மது பாட்டில்கள் கடத்தல், கைது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அனைத்து கட்சியின் மீதும் சுமார் 200க்கும் மேற்பட்ட வழக்குகள், அதிமுகவினர் தங்கிய விடுதிகளில் சோதனை, காவல்துறை ஐஜி, டிஎஸ்பி மாற்றம், தலைவர்களின் தீவிர சூறாவளி சுற்றுபயணம் வசைபாடுதல், குற்றச்சாட்டுகள், இடையிடையே கரன்ஸி மழை, என பல்வேறு சம்பவங்கள் காட்சிகளின் அரங்கேற்றம் இன்றுடன் முடிவடைந்தது.

இடையிடையே இடி முழக்கங்களும், மின்னலாய் தலைவர்கள் பிரச்சாரமும், திருசெந்தூர் தொகுதி மக்களை திருமங்கலம், சாத்தான்குளம் ஆகிய இடைத் தேர்தல்களை போல் திக்குமுக்காட செய்து விட்டது. கடந்த 15 நாட்களில் மட்டும் இத்தொகுதியில் பல கோடி ரூபாய்க்கு மது விற்பனை முதல் மளிகை கடை வரை வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் மத்தியில் பேசப்படுகிறது.

சூரசம்ஹார விழாவுக்கு பக்தர்கள் கூடுவதை போல் இடைத் தேர்தலுக்கு திருசெந்தூரில் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காணமுடிந்தது. காதுகளை செவிடாக்கும் ஓலிபெருக்கியோடு கூடிய பிரச்சார வாகனங்கள் புழுதியை கிளப்பி தலைவர் புகழோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தன.

அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணன் திருச்செந்தூர் வஉசி திடலில் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் நிறைவு செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எமபிக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தேரடி திடலில் மத்திய அமைச்சரும், தென்மண்டல செயலாளருமான அழகிரி தலைமையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். இதில் தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தேமுதிக வேட்பாளர் கோமதி கணேசன் உடன்குடி பாரதி திடலில் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் ஆஸ்டின் தலைமையில் பிரசாரத்தை நிறைவு செய்தார். இதில் கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொகுதியில் உள்ள பல்வேறு விடுதிகள், பங்ளாக்களில் கடந்த 20 நாளாக அனைத்து கட்சி தொண்டர்கள் நிரம்பி வழிந்த நிலையில் இன்று காலை முதலே பல விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் அறைகளை காலி செய்து வருகின்றனர். சிலர் இடங்களில் இடம் பெயர்ந்து வருகின்றனர். மேலும் விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் குறித்த பட்டியலையும் போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.

திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட 7 காவல் நிலையங்களுக்கு 3 மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் நியமி்க்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் டவுன், திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்திற்கு ஒரு எஸ்பியும், குலசேகரபட்டிணம், மெஞ்ஞானபுரம், குரும்பூர், ஆகிய காவல் நிலையங்கலுக்கு 1 எஸ்பியும், ஆறுமுகநேரி, ஆத்தூர் காவல் நிலையங்களுக்கு ஓரு எஸ்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும்...

தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இரு தொகுதிகளிலும் பிரசாரத்திற்காக வந்துள்ள வெளியூர்க்காரர்கள் வெளியேறி விட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வீடியோவில் பதிவு ...

இரு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.

தேர்தல் பாதுகாப்புக்காக 5 கம்பெனி கர்நாடக போலீசார், 6 கம்பெனி சி.ஆர்.பி.எப். படையினரும் ஈடுபடுத்தப்படுவர் என்றும் நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் தேர்தல் பிரசாரத்தின்போது பெருமளவில் அமளிகள், அடிதடி, ரெய்டுகள் நடந்ததால் இடைத் தேர்தல் முடிவு பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மெளனப் புரட்சி செய்து வருவதாக வைகோ கூறியுள்ளார். இரு தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அதேசமயம், இரு தொகுதிகளிலும் நமக்கே வெற்றி என்ற தெம்புடன் திமுகவினர் உள்ளனர்.

திருச்செந்தூர் தயார்...

இதற்கிடையே திருச்செந்தூர் இடைத் தேர்தல் அமைதியாக நடக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்றும், தொகுதி எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தேர்தல் அதிகாரி துரை ரவிசந்திரன் தெரிவி்த்தார்.

தொகுதி இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அலுவலர் துரை ரவிசந்திரன் கூறுகையில் தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு இயந்திரங்கள் நாளை காலை முதல் வாக்கு சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

வாக்கு சாவடி பணியில் 962 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் நாளை பகல் 12 மணிக்குள் வாக்குசாவடிகளில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர வருவாய் துறையினர் 200 பேரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தேர்தலுக்காக திருச்செந்தூர் தொகுதி முழுவது்ம் 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்கு பதிவு நிலவரம் எஸ்எம்எஸ் மூலம கண்காணிக்கப்படும்.

தேர்தலை கண்காணிக்க 132 மைக்ரோ அப்சர்வர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது தேர்தல் அறிக்கையை மத்திய தேர்தல் பார்வையாளரிடம் அளிப்பர்.

தேர்தல் பார்வையாளராக வீரேந்திர குமார் மீனா, விஜி குரியன் ஆகியோரும், கண்காணிப்பு அலுவலராக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் வீரராகவராவ் ஆகியோரும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை முன்னிட்டு தொகுதியின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள், மது பானங்கள் தொகுதிக்குள் நுழைவதை கண்காணிக்கவும், அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கவும் போலீசார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

டிஜிபி ஜெயி்ன் ஆய்வு...

இந்த நிலையில்,திருச்செந்தூர் தொகுதியில் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி ஜெயின் ஆய்வு நடத்தினார். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியையும் பார்வையிட்டார்.

பின்னர் போலீ்ஸ் அதிகாரிகளுடன் டிஜிபி ஜெயின் ஆலோசனை நடத்தினார். இதில் தென்மண்டல ஜஜி ஆபாஷ் குமார், நெல்லை சரக டிஜஜி கண்ணப்பன், எஸ்பிக்கள் தூத்துக்குடி செந்தில் குமார், நெல்லை ஆஸ்ரா கர்க், தேனி பாலகிருஷ்ணன், ராமநாதபுரம் பிரதீப்குமார், மற்றும் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் பங்கேற்றனர்.

பின்னர் டிஜிபி ஜெயின் நிருபர்களிடம் கூறுகையில், திருசெந்தூர் தொகுதியில் தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் 2 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர 5 கம்பெனி மத்திய துணை ராணுவ படையினரும், 4 கம்பெனி கர்நாடக மாநில போலீசாரும், பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். 3 ஆயிரம் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றார்.

வாக்கு சாவடி நுழைவாயிலில் துணை ராணுவம்

திருசெந்தூர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் அதிகாரிகளுடன் பேசுகையில், திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தல் வாக்கு பதிவுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.

வாக்கு பதிவு தொடங்கியது முதல் முடியும் வரை வாக்கு பதிவு விகிதங்களை தேர்தல் பணியாளர்கள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும்.

எந்த வாக்கு சாவடியிலும் மாலை 5 மணிக்கு மேல் வாக்கு பதிவு நடந்தாலும் அங்கு அனைத்து அதிகாரிகளும் சென்று கண்காணிக்க வேண்டும். மேலும் அங்கு சிறப்பு குழுககளை அனுப்பியும் கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு வாக்கு சாவடி நுழைவு வாயிலிலும் துணை ராணுவத்தினரை பாதுகாப்பிற்கு நிறுத்த வேண்டும். உள்ளூர் போலீசாரை வாக்கு சாவடிகளில் இருந்து சற்று தள்ளியே பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும். வாக்குப்பதிவுக்கு முந்திய நாள் மாலைக்குள் வாக்குபதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு சென்று விட வேண்டும்.

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பாஸ்போர்ட், பேன்கார்டு உள்பட 13 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்க வேண்டும். ரேசன் கார்டுகளை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது.

13 ஆவணங்களும் கடந்த 31-10-2009க்குள் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும். 49ஓ படிவம் குறித்து விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய போஸ்டர்களை பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் அனைத்து வாக்கு சாவடிகளி்லும் ஓட்ட வேண்டும்.

வாக்கு பதிவு முடிந்ததும் அனைத்து வாக்கு பதிவு இயந்திரங்களையும் சீல் வைத்து வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுகுறித்த தகவல்களையும் உடனே தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X