ஆளே மாறிட்டாரே.. ரூட் மாற்றிய விஜய்.. அப்செட்டில் தவெக 'ஐவர் அணி'? கோட்டைக்குள் நடப்பது என்ன?
சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளில் சில முக்கிய மாற்றங்கள் தென்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதல்வர் ஆவதற்கு முன்பிருந்த விஜய்க்கும், தற்போது கோட்டையை ஆளும் விஜய்க்கும் இடையே நிர்வாக ரீதியாகப் பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்சி நிர்வாகிகள் டூ அரசு அதிகாரிகள்: மாறிய டிராபிக்!
முதல்வர் ஆவதற்கு முன்பு வரை, தமிழகத்தின் எந்தவொரு அரசியல் பிரச்சனையாக இருந்தாலும் அல்லது கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த விவகாரமாக இருந்தாலும், தவெகவின் முக்கிய தூண்களாகக் கருதப்படும் ஜான், ஆதவ், ஆனந்த், அருண்ராஜ், நிர்மல் குமார் ஆகியோரிடம்தான் விஜய் முதன்மையாக ஆலோசிப்பார்.
அவர்களுடன் நீண்ட நேரம் விவாதித்து, முன்வைக்கப்படும் கருத்துக்களின் சாதக, பாதகங்களை (Positive & Negative) ஆழமாக ஆராய்ந்துப் பார்ப்பார். அதன் பின்னரே இறுதி முடிவை எடுப்பது விஜய்யின் வழக்கமாக இருந்தது. ஆனால், அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பிறகு இந்த பாணியில் ஒரு தெளிவான கோடு கிழிக்கப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்விவரம்: தற்போது அரசியல் சார்ந்த விவகாரங்கள் என்றால் மட்டுமே கட்சி முக்கியஸ்தர்களிடம் விஜய் விவாதிக்கிறார். அதேநேரம், அரசு நிர்வாகம் தொடர்பாக இந்த நிர்வாகிகள் ஏதேனும் யோசனைகள் சொன்னால், அதை வெறும் காது கொடுத்து மட்டுமே கேட்கிறாராம் முதல்வர்.
அரசு நிர்வாகம் என்று வந்துவிட்டால், அந்த யோசனைகளை அப்படியே அமல்படுத்தாமல், உடனே அவற்றை அரசின் உயரதிகாரிகள் மற்றும் செயலாளர்களிடம் (Secretaries) கொண்டு சென்று விவாதிக்கிறார். அதிகாரிகளின் தர்க்கரீதியான ஆலோசனைகள் மற்றும் கள நிலவரங்களின் அடிப்படையில்தான் தற்போது முதல்வர் விஜய் இறுதி முடிவுகளை எடுக்கிறாராம்.
அமைச்சர்களுக்கு 'வாட்ச்' வைக்கும் விஜய்
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும் முதல்வர் விஜய் கார்ப்பரேட் பாணியிலான புதிய நடைமுறையைப் புகுத்தியுள்ளார். தற்போதுதான் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் பல்வேறு துறைகளின் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
ஆரம்பத்திலிருந்தே இவர்களின் செயல்பாடுகள், கோப்புகளைக் கையாளும் விதம் மற்றும் பொதுமக்களுடனான அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்குமாறு தனது தனிச் செயலாளர்களுக்கு (Secretaries) முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
பெர்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்: அமைச்சர்களின் தினசரி மற்றும் வாராந்திர செயல்பாடுகளைக் கண்காணித்து தனக்குத் துல்லியமான 'பெர்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்' தருமாறு செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாகத் தூய்மை: ஆரம்பத்திலேயே அமைச்சர்களின் செயல்பாடுகளில் தொய்வோ அல்லது புகார்களோ வராத வண்ணம் இருக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எனத் தெரிகிறது.
மக்களுக்கான அரசு: கட்சி வேறு, அரசு நிர்வாகம் வேறு என்பதை அமைச்சர்களுக்கு உணர்த்தவே இந்த மறைமுகக் கண்காணிப்பு என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
தவெகவினர் மத்தியில் எழும் விவாதங்கள்
முதல்வர் விஜய்யின் இந்தத் திடீர் மாற்றங்கள் தவெக நிர்வாகிகளுக்கு ஆரம்பத்தில் சற்று வியப்பை ஏற்படுத்தினாலும், இது ஆரோக்கியமான நிர்வாகத்திற்கு அழகானது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கட்சி முக்கியஸ்தர்களின் பேச்சைக் கேட்டு மட்டுமே அரசு நிர்வாகத்தை நடத்தினால், அது நிர்வாகச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து, விஜய் முதிர்ச்சியோடு செயல்படுவதாகப் பாராட்டுகளும் குவிகின்றன. அதிகாரத்துவத்தின் (Bureaucracy) அனுபவத்தைப் பயன்படுத்தி, அதே நேரத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகளையும் கட்டுக்குள் வைக்கும் விஜய்யின் இந்த 'புதிய அவதாரம்' தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications