சிக்கலில் சிங்கப்பெண் படை! முதல்வர் விஜய்க்கு முக்கிய டிமாண்ட் வைத்த.. இடதுசாரி தலைவர்கள்!
சென்னை: தவெக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தன. இந்நிலையில், இன்று முதலமைச்சர் விஜய்யை இடதுசாரி தலைவர்கள் சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பில், சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடி படையின் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர்.
தவெகவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்), விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த கட்சிகள் தவெக கூட்டணியில் இன்னும் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை. இப்படி இருக்கையில், இக்கட்சிகளை இணைத்து, புதிய கூட்டணியை உருவாக்க தவெக திட்டமிட்டு வருகிறது.

எனவே இக்கட்சிகளின் தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களுடன் ஆலோசனை கூட்டத்தை கூட்ட இருந்தது. இந்த ஆலோசனையில் நாங்கள் பங்கேற்கப்போவத்தில்லை என்று சிபிஐ, சிபிஎம் தலைவர்கள் அறிவித்துவிட்டனர். இதனையடுத்துதான் முதலமைச்சர் விஜய்யை சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பு குறித்து தற்போது அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
சிபிஎம் பெ.சண்முகம்
சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், "பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமையை தடுக்க வேண்டும். சிங்கப்பெண் படையில் இருந்தவர்கள், ஏற்கெனவே காவல்துறையில் வேறு துறையில் இருந்தவர்கள்தான். சிங்கப்பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு முயற்சி எடுக்க வேண்டும்.
மத்திய அரசு புதியதாக கொண்டு வந்திருக்கும் தொழிலாளர் சட்டத்திற்கான விதிகளை வகுக்க, அனைத்து தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேசி தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். பாஜகவின் தொழிலாளர் நல சட்டத்தை அப்படியே அனுமதிக்க கூடாது. கேரளாவில், தொழிலாளர் சட்ட விதிகளை வகுக்க நீதிபதி கோபால் கவுடியா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.
அந்த குழுவின் அறிக்கையை கேட்டு பெற்று தமிழ்நாடு அரசு ஆலோசிக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் ஒத்த கருத்தை உருவாக்க அனைத்து கட்சிகள், விவசாய சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்" என்று கூறியிருக்கிறார்.
சிபிஐ வீரபாண்டியன்
சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில், "புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, ஏற்கெனவே இருக்கும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், குறிப்பாக பள்ளி ,கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலி பணியிடங்களால் கல்வி தரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், கான்டிராக்ட் முறை சுரண்டலுக்கு வழிவகுக்கும், எனவே கான்டிராக்ட் முறைக்கு முடிவுகட்ட வலியுறுத்தியுள்ளோம். நீண்ட கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications