அன்னைக்கு வேணாம்னு சொன்னீங்க.. இப்போ வேணுமா? விஜய்க்கு எதிராக வெடித்து கிளம்பிய கனிமொழி!
சென்னை: அணுக்கனிம சுரங்க திட்டம் விஷயத்தில் முதலமைச்சர் விஜய் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதாக திமுக சரமாரியாக குற்றம் சாட்டியிருக்கிறது. ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், ஒரு நிலைப்பாட்டிலும், வந்த பின்னர் இன்னொரு நிலைப்பாட்டிலும் தவெக இருக்கிறது என்று திமுக விமர்சித்திருக்கிறது.
திமுக எம்பி கனிமொழி இது குறித்து தனது x பக்கத்தில், "கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளன்று, ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல.

மக்களுக்கு செய்யும் துரோகம்
அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்க திட்டத்தைக் கைவிட வேண்டும் என தங்கள் கட்சியின் செயற்குழுவில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இப்போது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றிய அரசின் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் செயல்படும் இந்த தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு, தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்." என பதிவிட்டிருக்கிறார்.
தவெகவின் தீர்மானம்
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதியன்று தவெக செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில், கன்னியாகுமரி மட்டுமல்லாது மற்ற தமிழக கடலோர பகுதிகளில் அணுக்கனிம மணல் அகழ்வு மற்றும் சுரங்க திட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இப்போது வந்து, இந்த திட்டத்திற்கான காலக்கெடுவை நீடித்திருப்பது தவெகவுக்கு எதிரான விமர்சனங்களாக வெடித்திருக்கிறது.
என்ன திட்டம் இது?
அணுசக்தி உற்பத்தி துறையில் கனிமங்களுக்கு டிமாண்ட் அதிகம். பொதுவாக இந்த மாதிரியான கனிமங்களை வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய முடியும். ஆனால், இந்திய கடற்கரைகளில்.. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகளில் அரிய கனிமங்கள் இருக்கின்றன. எனவே மத்திய அரசின் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்திற்கு இந்த கனிமத்தை தோண்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதிக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
உள்ளூர் மக்களின் அச்சம்
அதாவது தோண்டி எடுக்கப்படும் மணலில் இருந்து யுரேனியம், தோரியம், இலாமினைட், மோனசைட் போன்றவை பிரிக்கப்படும். இதில் மோனசைட் போன்ற கனிமங்கள் இயற்கைளில் அதிக கதிரியக்கத்தை வெளிப்படுத்துபவை. இவற்றை அதிக அளவில் தோண்டி எடுக்கும்போது காற்றில் கதிரியக்கம் வெளிப்படுமோ? என்கிற அச்சம் உள்ளூர் மக்களிடம் இருக்கிறது.
அதேபோல கனிமங்களை எடுக்கிறோம் என்கிற பெயரில் மொத்த பீச்சையும் காலி செய்துவிடுகிறார்கள், இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் கடல் நீர் புகுந்துவிடுகிறது என்று மீனவர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள்.
அரசாணைக்கு எதிர்ப்பு
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கடந்த 2024ம் ஆண்டு நடந்த செயற்குழு கூட்டத்தில், தவெக இந்த கனிமங்கள் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. இப்படி இருக்கையில், தற்போது கனிமங்கள் எடுப்பதற்கான அனுமதியை மேலும் ஓராண்டுக்கு தவெக அரசு நீட்டித்து அரசாரணையை வெளியிட்டிருக்கிறது. அப்படி எனில், சொல்வது ஒன்று.. செய்து ஒன்று என தவெக அரசு நடந்துக்கொள்கிறதா? என்கிற கேள்விளை பல்வேறு தரப்பினரும் எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications