தவெக எம்எல்ஏவை தூக்க பிளான்? செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர், பிரபல யூடியூபர் உள்பட 3 பேர் கைது
சென்னை: ஊத்தக்கங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில், யூடியூபரும், தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தி வரும் IPDS திருநாவுக்கரசு உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு கட்சியில் இணையும்படி பேரம் பேசியதுடன், தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக தவெக எம்.எல்.ஏ கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவரும், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏவுமாக இளையராஜா சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் வேறு கட்சிக்கு மாறுமாறு கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும், இதற்காக பேரம் பேசியதாகவும் யூடியூபர் IPDS திருநாவுக்கரசு மீது புகார் அளித்து இருந்தார்.
இது தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று யூடியூபர் திருநாவுக்கரசை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவருடன் கார்த்திக், ரமேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

IPDS திருநாவுக்கரசு கைது
லயோலாவின் முன்னாள் மாணவர் என்று கூறி இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்ற பெயரில் யூடியூபில் அரசியல் கருத்துக்களை தெரிவித்தும், தேர்தல் கருத்துக்கணிப்புகளையும் வெளியிட்டு வந்தவர் தான் ஐபிடிஎஸ் திருநாவுக்கரசு என்பவர். இவர் சென்னை அரும்பாக்கம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் போலீசார் என்று சொல்லி சிலர் திருநாவுக்கரசை அழைத்து சென்றதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது மனைவி சென்னை அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை ஆய்வு செய்த போலீசார், திருவல்லிக்கேணி போலீசார் திருநாவுக்கரசை கைது செய்திருப்பதாகவும், யாரும் அவரை கடத்தவில்லை என்றும் அவரது மனைவியிடம் தெரிவித்தனர். தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய புகாரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
யார் சொல்லி இப்படி பேரம் பேசினார்?
ஊத்தங்கரை தனித் தொகுதி எம்.எல்.ஏவும், தவெகவை சேர்ந்தவருமான இளையராஜா என்பவர், தன்னிடம் பேரம் பேசியதாகவும், வேறு கட்சியில் சேர சொல்லி தொடர்ந்து பலமுறை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய திருவல்லிக்கேணி போலீசார் யூடியூபர் திருநாவுக்கரசரை கைது செய்துள்ளனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் இவர் பல எம்.எல்.ஏக்களிம் இப்படி குதிரை பேரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்து இருக்கிறது.
யார் சொல்லி இவர் பேரம் பேசினார் என்பது குறித்து திருநாவுக்கரசரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் திமுகவை சேர்ந்தவர் உள்பட மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திக், ரமேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் கார்த்திக் என்பவர் கரூர் திமுகவின் விளையாட்டு அணி மாநில துணைப் பொதுச்செயலர் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
