மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யாமல் தடுத்தது யார்.. இது என்ன பேரம்.. திமுக மீது துரை வைகோ காட்டம்
புதுக்கோட்டை: தேர்தலுக்கு பிறகும் தமிழக அரசியலின் பரபரப்பு ஓயவில்லை. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைந்துள்ளது. தவெக குதிரை பேரம் நடத்துவதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை தலைமை ராஜினாமா செய்ய சொல்லியும் அவர்களை தடுத்தது யார். இது குதிரை பேரமா, கழுதை பேரமா, யானை பேரமா என்று துரை வைகோ ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "கட்சி பணிகளில் தொடர்ச்சியாக பயணித்து கொண்டிருக்கிறேன். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தபோது குதிரை பேரம் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். மதிமுக சார்பில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இயக்க தலைமை எடுத்த முடிவுக்கு எதிராக அவர்கள் செயல்படும் நிலையை உருவாக்குகிறார்கள்.

குதிரை பேரமா கழுதை பேரமா
குதிரை பேரம், கழுதை பேரம், ஒட்டக பேரம் என பல பேரங்களை சோபா மாடல் மூலமாகவும், கன்டெய்னர் மாடல் மூலமாகவும் செயல்படுத்துபவர்களிடம் எங்கள் எம்எல்ஏக்களை இழந்துள்ளோம். நாங்கள் திமுக கூட்டணியை விட்டு விலகுகிறோம். எங்கள் எம்எல்ஏக்கள் மதிமுக சின்னத்தில் போட்டியிடவில்லை. அவர்கள் இன்னொரு கட்சி சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தப்பட்டனர். இதற்காக எங்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப்பட்டு, திமுக உறுப்பினர்களாக தேர்தலில் போட்டியிட வைத்தனர்.
டெக்னிக்கலாக அவர்கள் இருவரும் மதிமுக எம்எல்ஏக்கள் இல்லை. திமுக எம்எல்ஏக்களாக உள்ளனர். அவர்களை திமுகவிலேயே சேர்க்க வைத்துள்ளனர். எங்கள் கட்சி 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். எங்கள் பொதுச்செயலாளர், நாங்கள் திமுக கூட்டணியில் விலகுகிறோம் என்றார். திமுக சின்னத்தில் நின்ற எம்எல்ஏக்கள் இருவரையும் ராஜினாமா செய்ய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது கட்சியின் பெருவாரியான நிர்வாகிகள் முடிவு. இதை தவறு என சொல்ல முடியாது.
தலைமை முடிவுக்கு எதிராக
எங்கள் கட்சி தலைமை எடுக்கும் முடிவை தடுப்பதற்கு பெயர் என்ன பேரம். சட்டமன்ற தேர்தலில் திமுக எவ்வளவு ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. அதையும் மீறி 35 சதவீதம் வாக்கு வங்கியுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. ஒற்றை காசு கொடுக்காமல் தவெக ஆட்சியமைத்துள்ளது. தேர்தலில் திமுக சுமார் 6,000 கோடி செலவு செய்தது. அதையும் மீறி விஜய் முதலமைச்சராகியுள்ளார். பணம் கொடுத்து எம்எல்ஏக்களை வாங்குவது யார். இதை தவெக செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
மாற்றம் வேண்டுமென தவெகவுக்கு வாக்களித்து மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். அவர்கள் ஏன் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். பணம் கொடுத்து ஆட்சியை பிடிக்க நினைத்தது யார். அதற்காக பல ஆயிரம் கோடிகளை இறக்கிய கட்சிகள் யார். இப்போது தேர்தல் முடிந்துள்ளது. மக்கள் தீர்ப்புக்கு எதிராக, அதிமுக திமுக கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார்கள். அது என்ன பேரம். எங்கள் தலைமை முடிவை மீறி எம்எல்ஏக்கள் செயல்படுவதன் பெயர் கழுதை பேரமா, குதிரை பேமா" என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications